தமிழ்நாடு
உடைகிறது அதிமுக கூட்டணி… ‘தனித்துப் போட்டியிட தயார்!’- அறிவித்த தேமுதிக

தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையில் இணக்கமான போக்கு இல்லை எனத் தெரிகிறது. அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இதில் பாஜக மட்டும் தான், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக உடனான கூட்டணி தொடரும் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது. மற்ற எந்தக் கட்சிகளும் இதுவரை கூட்டணி தொடர்வது குறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. இன்னும் தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணி சுக்குநூறாக உடையுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக எந்தக் கட்சியும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமியை, தங்களின் முதல்வர் வேட்பாளராக ஏற்கவில்லை. இதனால் பிரச்சனை மேலும் பூதாகரமாகி உள்ளது.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், ‘நாம வரப் போற தேர்தல்ல கூட்டணியில போட்டியிடவும் வாய்ப்பிருக்கு. தனித்துப் போட்டியிடவும் வாய்ப்பிருக்கு. எதுவா இருந்தாலும் எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும். கேப்டன் மாதிரி ஆட்கள் நம்ப நாட்டுல தோத்துறக் கூடாது’ என்று அதிரடியாக பேசியுள்ளார். இதைச் சுட்டிக்காட்டி, கூட்டணி முறிவு குறித்து தான் விஜய பிரபாகரன் மறைமுகமாக பேசியுள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக சசிகலா விடுதலை குறித்துப் பேசியிருந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், ‘சசிகலாவின் பங்கும் தமிழக அரசியலில் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒரு பெண்ணாக அவர் பூரண நலம் பெற்று தமிழக அரசியலில் தாக்கம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று சூசகமாக கூறியுள்ளார்.















