தமிழ்நாடு
பாஜகவிடம் பிச்சையெடுக்கும் அதிமுக: துக்ளக் கேலிச்சித்திரம்!

பாஜக தலைவர் அமித்ஷாவின் நெருங்கிய நண்பரும், ஆர்எஸ்எஸ் காரரும், பாஜக ஆதரவாளருமான ஆடிட்டர் குருமூர்த்தி துக்ளக் வார இதழின் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த வார இதழில் பாஜகவிடம் அதிமுக பிச்சை எடுப்பது போன்ற கேலிச்சித்திரம் ஒன்று வெளிவந்துள்ளது.
இன்று வெளிவந்த துக்ளக் இதழின் 9-ம் பக்கத்தில் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெற செய்துவரும் முயற்சிகளை கேலி செய்யும் விதமாக கேலிச்சித்திரம் ஒன்று வெளிவந்துள்ளது. அதில், பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் அறைக்குள் அமர்ந்து விருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க வெளியே ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் காத்து நிற்பது போல வரையப்பட்டு உள்ளது. மேலும் அதில், உஸ்ஸ்… யாரும் அழப்படாது. நம்மளையெல்லாம் உள்ள கூப்பிட மாட்டாங்க. கடைசியா ஏதாவது மீந்துச்சுன்னா குடுப்பாங்க. அப்ப சாப்பிடலாம் என எழுதப்பட்டுள்ளது.
இது மத்திய அமைச்சர் பதவிக்கு பாஜகவிடம் அதிமுக பிச்சை எடுப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆடிட்டர் குருமூர்த்தி அதிமுகவை இவ்வாறு கடுமையாக விமர்சிப்பது முதல்முறையல்ல, இதற்கு முன்னர் அதிமுக தலைவர்களை ஆண்மையற்றவர்கள் என குறிக்கும் ஆங்கில வார்த்தையால் விமர்சித்திருந்தார்.


















