தமிழ்நாடு
தோண்ட தோண்ட ஊழல், ஆவணங்கள் மாயம்: ஆவின் ஊழல்கள் அம்பலம்!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகள் செய்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து ஆவின் நிறுவனங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட பால்வளத்துறை அமைச்சர் நாசர், முறைகேடுகள் விரைவில் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படும் என்று கூறியிருந்தார்.
கடந்த 2018 – 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான முக்கிய கோப்புகள் மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முறைகேடுகள் தொடர்பாக ஆவணங்களை அதிகாரிகள் தணிக்கை செய்ததில் பல்வேறு தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் நியமிக்கப்பட்டனர்.
இந்த விசாரணையில் 2018-2019 இல் அனுமதிக்கப்பட்ட விளம்பரச் செலவு 5 கோடியே 63 லட்சத்துக்கு பதிலாக 10 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி அதிகாரிகள் கூறிய நிலையில் 4 கோடியே 40 லட்சம் செலவு கணக்குகள் கொண்ட 78 கோப்புகள் மட்டுமே விசாரணை குழு முன்பு தாக்கல் செய்யப்பட்டதாகவும், எஞ்சிய 5 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவில் அதற்கான ஆவணங்கள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து 5 கோடியே 93 லட்சம் செலவு கணக்குகளுக்கான ஆவணங்கள் அழிக்கப்பட்டு அல்லது தொலைக்கப்பட்டு இருக்கலாம் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மாயமான கோப்புகளில் முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் இடம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் விசாரணை அதிகாரி அலெக்ஸ் தலைமையிலான குழு விசாரணை அறிக்கையை ஆவின் நிர்வாகத்தில் சமர்ப்பித்துள்ளது. அதன்படி ஆவணங்களை அழித்து நிதி இழப்பு ஏற்படுத்திய ஆவின் அதிகாரிகள் ஐந்து பேர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் மோசடியில் ஈடுபட்ட கூட்டுறவுத் துறை கூடுதல் பதிவாளர் மீதும் நடவடிக்கை எடுக்க துணை பதிவாளருக்கு திருவள்ளூர் காவல்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளான தணிக்கை துறை அதிகாரிகள் மீது குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில் தற்போது அதிகாரிகளும் சிக்கியுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.






















