இந்தியா
ஆவணங்களே இல்லாமல் ஆதாரில் முகவரியை புதுப்பிக்கலாம்.. எப்படி தெரியுமா?

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு அடையாள அட்டையாக விளங்கி வருகிறது என்பதும் ஆதார் அட்டை இல்லாமல் எந்த ஒரு பரிவர்த்தனையும், கணக்குகளும் தொடங்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஆதார் அட்டையுடன் வங்கி கணக்கு, பான் அட்டை, ரேஷன் கார்டு, எலக்ட்ரிக் கட்டண அட்டை என அனைத்து ஆவணங்களிலும் இணைக்கப்பட்டு விட்டதால் ஆதார் அட்டை என்பது இன்றியமையாத ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு மாறிவிட்டால் ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்வதில் பெரும் சிக்கல் வரும். புதிய வீட்டின் முகவரி அடையாள அட்டை ஏதும் இல்லாதவர்கள் எப்படி ஆதார் அட்டை வைத்திருப்பது புதுப்பிப்பது என்ற சிக்கல் ஏற்படும். அந்த சிக்கலை தவிர்க்கும் வகையில் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் ஆதார் அட்டையில் முகவரியை புதுப்பிக்க புதிய முறை ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய முறையின் படி ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் அல்லது புதுப்பிக்க முடியும். அதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த முறையின் படி குடும்பத் தலைவரின் ஒப்புதலுடன் ஆன்லைனில் ஆதார்ல் உள்ள முகவரியை புதுப்பிக்க உதவுவதற்கான வசதியை அமைத்துக் கொடுத்துள்ளது. மேலும் குடும்பத் தலைவரின் ஆதார் அட்டை மட்டுமின்றி மனைவி, குழந்தைகள், பெற்றோர் போன்ற உறவினர்களின் ஆதார் முகவரி புதுப்பிக்க இந்த நடைமுறை பெரிதும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.
ரேஷன் கார்டு, மதிப்பெண் பட்டியல், திருமண சான்றிதழ், பாஸ்போர்ட் அல்லது வேறு ஏதாவது புகைப்படங்களுடன் கூடிய ஆவணங்கள் குடும்ப தலைவரின் பெயரில் இருந்தால் அவர்களது ஆதார் அட்டையில் உள்ள முகவரியை ஓடிபி அடிப்படையில் புதுப்பித்துக் கொள்ளலாம்.
பல காரணங்களுக்காக ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு மாறுபவர்கள் இந்த முறையை தேர்வு செய்து கொண்டு முகவரியை எளிதில் புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப தலைவராக இருக்கும் யாரும் இந்த செயல்முறையின் மூலம் முகவரியை தெரிவித்துக் கொள்வதோடு அவர்களுடைய உறவினர்களும் முகவரியை புதுப்பித்துக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஆதார் அட்டையை எந்தவித ஆவணங்களின்றி முகவரியை மாற்றுவது எப்படி என்பதை தற்போது பார்ப்போம்.
எனது ஆதார் போர்ட்டலுக்கு முதலில் செல்ல வேண்டும். அல்லது https://myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்
ஆன்லைனில் முகவரியை புதுப்பிக்கும் விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
நீங்கள் குடும்பத்தலைவரின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
குடும்ப தலைவரின் ஆதார் எண்ணின் வெற்றிகரமான சரிபார்ப்புக்கு பிறகு, நீங்கள் உறவுச் சான்று ஆவணத்தைப் பதிவேற்ற வேண்டும்.
இந்த சேவைக்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
ரூ.50 பணம் செலுத்திய பின்னர்சேவை கோரிக்கை எண் (SRN) பகிரப்படும். மேலும் முகவரி கோரிக்கை குறித்து குடும்பத்தலைவரின் மொபைல் எண்ணுக்கு SMS அனுப்பப்படும்.
இந்த SMS பெற்ற நாளிலிருந்து 30 நாட்களுக்குள் எனது ஆதார் போர்ட்டலில் உள்நுழைந்து முகவரி மாற்றம் குறித்த கோரிக்கையை குடும்பத்தலைவர் அங்கீகரிக்க வேண்டும். அவர் அங்கீகரித்தவுடன் முகவரி மாற்றம் கோரிக்கை செயல்படுத்தப்படும்.
குடும்ப தலைவரின் முகவரியைப் பகிர நிராகரித்தால், அல்லது SRN உருவாக்கப்பட்ட 30 நாட்களுக்குள் ஏற்கவில்லை என்றால், கோரிக்கை கைவிடப்படும். கோரிக்கையை கைவிடுவது குறித்தும் SMS மூலம் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், விண்ணப்பதாரருக்கு ரூ.50 பணம் திருப்பித் தரப்படாது.