இந்தியா
டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த பெண்.. உடன் சென்ற தோழியின் திடுக்கிடும் வாக்குமூலம்

டெல்லியில் புத்தாண்டு தினத்தில் இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த போது கார் ஒன்று மோதி 12 கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்று பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண்ணின் ஸ்கூட்டரில் அவரது தோழியும் சென்றதாக சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த விபத்து குறித்து இரண்டு நாளாக எதுவும் சொல்லாமல் இருந்த அந்த தோழி தற்போது போலிஸாரின் விசாரணையில் வாக்குமூலம் கொடுத்து இருப்பதும், அதில் அவர் கூறியுள்ள தகவல் திடுக்கிடும் வகையில் இருப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜனவரி 1-ஆம் தேதி டெல்லி கஞ்சவாலா என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென பின்னால் வந்த கார் அவர்களுடைய இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த அஞ்சலி காருடன் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக பலியாகினர். அவரது உடையும் அலங்கோலமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அதே இருசக்கர வாகனத்தில் சென்ற அவரது தோழி இதுகுறித்து போலீஸாரிடம் கூறியபோது, ‘கார் எங்கள் மீது மோதிய போது நான் ஒரு பக்கமாக விழுந்து விட்டேன். ஆனால் எனது தோழி காரில் மாற்றிக் கொண்டார். அவர் காரில் மாட்டிக்கொண்டது காரில் இருந்த ஆண்களுக்கு நன்றாக தெரியும். இருந்தும் அவர்கள் வேண்டுமென்றே அவளை இழுத்துச் சென்றனர் என்று கூறினார்.
மேலும் தனது தோழி அஞ்சலி குடிபோதையில் இருந்ததாகவும் அதனால் வாகனத்தை ஓட்ட வேண்டாம் என்று தான் வற்புறுத்தியதாகவும் ஆனால் அவர் தன்னால் வாகனத்தை ஓட்ட முடியும் என்று நம்பிக்கையுடன் கூறியதால் அவரை நம்பி வண்டியில் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது தவறு தான் என்றும் அந்த தவறை செய்ததால் தான் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் காருடன் தனது தோழி இழுத்துச் சென்றதைப் பார்த்து நான் பயந்து விட்டேன் என்றும் வீட்டுக்கு திரும்பி யாரிடமும் இதுகுறித்து எதுவும் சொல்லவில்லை என்றும் ஆனால் சிசிடிவி காட்சியை வைத்து என்னை போலீசார் கண்டுபிடித்து விட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் விபத்துக்கு முன்னரும் அஞ்சலி மற்றும் அவரது தோழி ஆகிய இருவரும் புத்தாண்டு விருந்தில் கலந்து கொண்டதாகவும் ஆனால் விருந்தில் கலந்து கொண்டிருக்கும் போது இருவருக்கும் சண்டை நடந்ததாகவும் விருந்து நடந்த இடத்தின் மேலாளர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். வெளியே போய் சண்டை போடுங்கள் என்று தான் கூறிய உடன் வெளியே போய் இரண்டு பேரும் சண்டை போட்டதாகவும் அதன்பிறகு இருவரும் ஸ்கூட்டியில் சென்று விட்டதாகவும் ஓட்டல் மேலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பலியான பெண் அஞ்சலியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்துள்ள நிலையில் அவர் பாலியல் ரீதியாக எந்தவிதமான துன்புறுத்தலும் செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.