இந்தியா
23 வயதிலேயே வேலைநீக்கம்.. பெங்களூரு ஐஐடி பட்டதாரியின் பரிதாப நிலை

23 வயதிலேயே வேலை நீக்கம் செய்யப்பட்ட ஐஐடி பட்டதாரி ஒருவர் தனது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதை தனது லிங்க்டின் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு நெட்டிசன்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் உள்பட பல்வேறு காரணங்களால் உலகின் முன்னணி நிறுவனங்களில் கூட வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட பல நிறுவனங்களும் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்ற நிலையில் கோல்ட்மேன் சாக்ஸல் என்ற நிறுவனம் 3200 ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது என்பதும் அந்நிறுவனத்தில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட இந்தியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் லிங்க்ட்இன் பக்கத்தில் புலம்பியதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் அதே நிறுவனத்தில் பணிபுரிந்த ஐஐடி பட்டதாரி 23 வயதிலேயே தான் வேலை இழந்ததாக லிங்க்ட்இன் பக்கத்தில் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. கோல்ட்மேன் சாக்ஸல் என்ற நிறுவனத்தின் பெங்களூரு கிளையில் பணிபுரிந்து வரும் ஐஐடி பட்டதாரியான சாஹூ என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னால் தான் வேலையில் சேர்ந்ததாகவும் மிகப்பெரிய கனவுடன் நிறைய கற்றுக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்புடன் வேலையைச் சேர்ந்த நிலையில் தற்போது திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐஐடி பட்டம் முடித்துவிட்டு முதல் முதலாக ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை சேர்ந்த மகிழ்ச்சியில் இருந்த நிலையில் தனக்கு புத்தாண்டில் இப்படி ஒரு அதிர்ச்சி செய்தி வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். வேலையை இழந்த செய்தியால் அதிர்ச்சி அடைந்ததால் தற்போது புதிய வேலையை தேடும் முயற்சியில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐஐடி காரக்புரில் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த பட்டதாரியான இவர் கோல்டுமேன் சாக்ஸல் நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்கு முன் சின்ன சின்ன கம்பெனிகளில் வேலை பார்த்ததாகவும் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் தனது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று தான் நம்பியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இது எனது முதல் நல்ல வேலை என்றும் மென்பொருள் மேம்பாட்டில் எனது முதல் அனுபவம் என்றும் கூறியுள்ள அவர் இந்த நிறுவனத்தில் நிறைய கற்றுக் கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்றும் அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு லிங்க்ட் இன் பயனாளர்கள் ஆறுதல் கூறி வருவதோடு விரைவில் மீண்டும் புதிய வேலை கிடைக்க வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.























