இந்தியா
இலங்கைக்கு உடனே இந்திய ராணுவத்தை அனுப்புங்கள்: சுப்பிரமணியன் சுவாமி
இலங்கைக்கு உடனே இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என பாஜக எம்பி சுப்பிரமணியன் சாமி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் தற்போது கட்டுக்கடங்காத வன்முறை நிகழ்ந்து வருகிறது என்பதும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் வீடு உள்பட பல ஆளும் கட்சி தலைவர்களின் வீடுகள் தாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி சமீபத்தில் ஆளும் கட்சி எம்பி ஒருவர் பொதுமக்களால் அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இலங்கையில் நிலவரத்தை கட்டுப்படுத்த உடனடியாக இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கலவரம் செய்பவர்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது என்றும் நமது அண்டை நாடு இன்னொரு லிபியா போல் மாறிவிடக் கூடாது என்றும் பிரதமர் வீட்டிற்கு தீ வைக்கும் அளவுக்கு வன்முறை செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் .
மேலும் அரசியலமைப்பு சட்டத்தை மீட்டெடுக்க இந்தியா தனது இராணுவத்தை அனுப்ப வேண்டும் என்றும் தற்போது மக்களின் கோபத்தை இந்திய எதிர்ப்பு சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன என்றும், இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பை பாதிக்கிறது எனவும் கூறியுள்ளார்.
ஆனால் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் இந்திய ராணுவம் இலங்கைக்கு அனுப்பப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




















