தமிழ்நாடு
கோவில் குளியலறையில் மூன்று ரகசிய கேமிரா: தூத்துகுடி அருகே பரபரப்பு!

தூத்துக்குடி மாவட்டம் சித்தவன்நாயக்கன்பட்டி என்ற பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதும் ஆண்டுக்கு ஒருமுறை மாசி படைப்பு திருவிழா அன்று ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதில் கலந்து கொள்ளவும் சுவாமி தரிசனம் செய்யவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவது உண்டு. வெளியூர் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் தங்குமிடங்கள், கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற பௌர்ணமி சிறப்பு பூஜையில் பங்கேற்க வந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் கோவில் வளாகத்தில் உள்ள குளியலறைக்கு குளிக்கச் செல்லும்போது சுவரில் கருப்பு நிறத்தில் வயர் ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதை எடுத்து பார்த்தபோது அது ரகசிய கேமரா என்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து அவர் அலறி அடித்துக் கொண்டு குளியலறையிலிருந்து வெளியே வந்து கோவில் நிர்வாகிகளிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்த தகவல் விளாத்திகுளம் காவல் நிலையத்திற்கு செல்லவே போலீசார் விரைந்து வந்து குளியல் அறையில் சோதனை நடத்திய போது அந்த குளியலறையில் மேலும் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து மூன்று ரகசிய கேமராக்களையும் பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த கேமராக்களை வைத்தது யார்? இதில் பதிவான வீடியோக்கள் யார் யாரிடம் உள்ளது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கோவிலுக்கு வந்த பெண் பக்தர்களின் குளியலறையில் கேமராவை வைத்து வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





















