தமிழ்நாடு
ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு திடீர் மனு!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த முன்ஜாமீன் மனு குறித்து தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய தமிழக காவல்துறை 10 தனிப்படை அமைத்து தேடி வருகிறது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் அவரது சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் வர உள்ள நிலையில் தமிழக அரசு திடீரென கேவியட் மனு தாக்கல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தங்கள் தரப்பை கேட்காமல் ராஜேந்திரபாலாஜியின் முன்ஜாமின் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்து உள்ளது. இதனால் ராஜேந்திரபாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீன் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


















