இந்தியா
ஒரே கல்லூரியில் 32 மாணவர்களுக்கு கொரோனா: சீல் வைத்த அதிகாரிகள்!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இன்று முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடக மாநிலத்தில் ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவன் 32 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன என்பதும் அதேபோல் கல்லூரிகளும் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி வரும் 6ஆம் தேதி முதல் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் என்ற பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வரும் 32 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 32 மாணவர்களும் சமீபத்தில் கேரளா சென்று வந்ததாகவும் இதனால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து அந்த கல்லூரி மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது என்பதும் அந்த கல்லூரியில் படித்து வரும் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 32 கல்லூரி மாணவர்களை கல்லூரி நிர்வாகம் தான் கேரளாவுக்கு அனுப்பி உள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து கல்லூரி நிர்வாகம் மீது விசாரணை செய்யப்படும் என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.







