தமிழ்நாடு
திமுக ஆட்சியில் மீண்டும் கவனிக்கப்படும் வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர் சிலை!

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் முயற்சியால் உருவானது சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை என்பது தெரிந்ததே. ஒவ்வொரு முறை திமுக ஆட்சி வரும்போதும் வள்ளுவர் கோட்டம் மற்றும் திருவள்ளுவர் சிலை புனரமைக்கப்படும் என்பதும் அதிமுக ஆட்சி ஏற்பட்டதும் கண்டுகொள்ளாமல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்பட்டுள்ளதை அடுத்து வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, பூம்புகார் ஆகிய சுற்றுலாதளங்கள் புனரமைக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், ‘தமிழகத்தில், மக்கள் அதிகம் கூடும் சுற்றுலா பகுதிகளை மக்கள் ரசிக்கும் வகையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பாக கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, சென்னை வள்ளுவர் கோட்டம், பூம்புகார் ஆகிய சுற்றுலா பகுதிகளை புனரமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் சுற்றுலாத்துறைக்கான மொபைல் செயலியை மேம்படுத்தி மக்கள் எளிதில் பயன்படுத்தவும் பயன்பெறவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்


















