தமிழ்நாடு
தமிழகத்துக்கு 7.33 லட்சம் தடுப்பூசி ஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு!

தமிழகத்திற்கு 7.33 லட்சம் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மட்டும் தமிழகத்தில் சுமார் 18 ஆயிரம் பேர் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும், சென்னையில் மட்டும் சுமார் 6 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆர்டர் செய்த தடுப்பூசிகள் இன்னும் வரவில்லை என்பதால் 18 வயதிற்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அப்பல்லோ உள்பட ஒருசில தனியார் மருத்துவமனைகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சற்று முன்னர் தமிழகத்திற்கு 7.33 லட்சம் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் இரண்டு வாரங்களில் தமிழகத்துக்கு 7.33 லட்சம் தடுப்பூசி அனுப்பப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்த பின்னர் 18 வயதுக்கு மேலானவர்களுக்கும் போடப்படும் என்று தெரிகிறது.







