தமிழ்நாடு
“இப்படியொரு தீர்ப்பு வரும்னு எதிர்பாக்கலீங்க…”- புலம்பும் சரத்குமார்; சிறை உறுதியா?

செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம், ஓராண்டு சிறைத் தண்டனை விதிதத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தண்டனைக்குத் தற்போது இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சரத்குமார் தரப்பு வழக்கை சுமுகமாக முடிக்கவில்லை என்றால் ஓராண்டு சிறைத் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்யும்.
இந்த சிறைத் தண்டனைத் தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை என்றும், இதற்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என்றும் சரத்குமார் விளக்கியுள்ளார்.
முன்னதாக நடிகர்கள் சரத்குமார், ராதிகா பங்குதாரர்களாக இருக்கக்கூடிய ‘மேஜிக் ப்ரேம்’ என்ற நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு திரைப்படம் ஒன்றைத் தயாரித்துள்ளது. இதற்காக ‘ரேடியன்ஸ் மீடியா’ என்கிற நிறுவனத்திடம் இருந்து 1. 5 கோடி ரூபாயைக் கடனாக பெற்றுள்ளது. இந்தக் கடனை 2015 ஆம் ஆண்டுக்குள் திரும்பத் தருவதாக ஒப்பந்தம் செய்துள்ளது சரத்குமார் – ராதிகா தரப்பு.

ஆனால் அவர்கள் கடனை திருப்பிக்கொடுக்காமல் அடுத்தப் படத்தை தயாரித்துள்ளனர். இதனால் கோபமடைந்த ரேடியன்ஸ் மீடியா நிறுவனம், சரத்குமார் மற்றும் ராதிகா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதில் சரத்குமார் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட 7 செக்குகளும், அவரது வங்கிக் கணக்கில் பணமில்லாத காரணத்தினால், திரும்பி வந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், சரத்குமார் தரப்பு செக் மோசடியில் ஈடுபட்டதை ஓப்புக் கொண்டது. அதன் அடிப்படையில் சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
தொடர்ந்து இந்தத் தீர்ப்பை எதிர்ப்பு சரத்குமார் தரப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. சரத்குமார் தரப்பின் வாதங்களை ஏற்றுக் கொண்டு தற்போதைக்கு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது நீதிமன்றம். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், ‘இப்படியான தீர்ப்பு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை யாரும் ஏமாற்றும் எண்ணம் எங்களுக்கு இருக்கவில்லை. பணத்தைத் திரும்பித் தர நாங்கள் தயாராகவே இருக்கிறோம். நாங்கள் கொடுக்க வேண்டிய தொகை 1.5 கோடி ரூபாய். அதே நேரத்தில் நாங்கள் கேரண்டியாக கொடுத்த தொகை இதை விட மிகவும் அதிகம். அப்படி இருக்கையில் சிறைத் தண்டனை விதிக்கப்படும் அளவுக்கு தீர்ப்பு கொடுத்தது ஏன் என்று தெரியவில்லை. இதை அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாக நான் பார்க்கவில்லை.

இது முழுக்க முழுக்க தொழில் சார்ந்த சிக்கல் தான். இந்த விவகாரத்தை அரசியல் பழிவாங்கல் என்று சொல்லி நான் தப்பித்துக் கொள்ள விரும்பவில்லை. இது குறித்து சுமூக தீர்வு எட்டப்படும். சட்ட ரீதியாக நாங்கள் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்போம்’ என்று கூறியுள்ளார்.





















