தமிழ்நாடு
சோபியா கைதில் பாஜகவின் பாசிசம் நேற்று முழுமையாக வெளிப்பட்டது: இது தான் நாம் விரும்பும் இந்தியாவா?

பாசிச பாஜக ஒழிக என விமானத்தில் கோஷமிட்டதால் மாணவி சோபியாவை கைது செய்து, 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்ட சம்பவம் நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த கைது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி, பாஜகவின் பாசிசம் நேற்று முழுமையாக வெளிப்பட்டுள்ளது. பாசிச பாஜக அரசு ஒழிக என கோஷமிட்ட பெண்மீது பாஜக தலைவர் புகார் அளித்து 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது என்பது வேறு விவகாரம்.
பாசிச பாஜக ஒழிக என கோஷமிட்டதால் ஒருவருக்கு 15 நாட்கள் சிறை விதித்ததை அவசரநிலை என்றுதான் கூறவேண்டும். அந்த விமானத்தில் நடந்தது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் மீதான தாக்குதல் மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல். பாஜகவை கேள்விகேட்டால் தேச விரோதி, அரசை கேள்விகேட்டால் துரோகி. இதுதான் நாம் விரும்பும் இந்தியாவா? என அவர் கடுமையாக சாடியுள்ளார்.























