தமிழ்நாடு
காஷ்மீர் பிரச்சனையில் தலையிடுவேன்: மீண்டும் பேசும் அமெரிக்கா அதிபர் டிரம்ப்!

இந்தியா, பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக காஷ்மீர் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்ததாக டிரம்ப் கூறியதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக மீண்டும் பேசியுள்ளார் அமெரிக்கா அதிபர் டிரம்ப்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்கா சென்றபோது அவரை வெள்ளை மாளிகையில் வரவேற்றுப்பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் பிரச்சனை நீண்ட காலமாக உள்ளது. இந்தியா எங்களது நெருங்கிய நட்பு நாடு. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜி20 மாநாட்டில் நானும் இந்திய பிரதமர் மோடியும் காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போது, மோடி என்னிடம், நீங்கள் இந்த பிரச்சினையை மீடியேட்டராக இருந்து தீர்க்க விரும்புகிறீர்களா? நடுவராக இருந்து தீர்க்க விரும்புகிறீர்களா? என்று கேட்டார். நான் இரு நாடுகளுக்கும் இடையிலான மீடியேட்டராகவே இருந்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரும்புகிறேன் என்று பேசியினார் டிரம்ப். டிரம்பின் இந்த பேச்சு இந்தியா, பாகிஸ்தான் இரு நாட்டிலும் பெரும் விவாதத்தை உருவாக்கியது.
இதனையடுத்து மக்களவையில் இதனை எதிர்க்கட்சிகள் பெரும் விவகாரமாக மாற்றியது. இந்தியாவின் அனுகுமுறை மாறிவிட்டது என குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த விளக்கத்தில், பிரதமர் மோடி சார்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக எந்த வேண்டுகோளும் வைக்கப்படவில்லை.
காஷ்மீர் பிரச்சினை இரு நாடுகளின் பிரச்சினை. இந்தியாவும் பாகிஸ்தானும் இரு தரப்புப் பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காணவேண்டும் என்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு. காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நபரின் தலையீடு தேவையற்றது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என கூறி டிரம்பின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று வாஷிங்டன்னில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்பிடம் இந்தியா மறுத்துள்ளது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த டிரம்ப், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் விரும்பினால் மட்டுமே நான் இந்த மத்தியஸ்தர் பணியில் ஈடுபடத் தயாராக இருக்கிறேன். இம்ரான்கானும் மோடியும் மிகச் சிறந்தவர்கள். காஷ்மீர் பிரச்சினையில் யாராவது தலையிடலாம் என்று அவர்கள் விரும்பினால் மட்டுமே நான் அதில் தலையிட முடியும். அவர்கள் விரும்பினால், நான் நிச்சயமாக நீண்ட கால பிரச்சினையான காஷ்மீர் பிரச்சினையில் தலையிடுவேன் என்றார்.

















