உலகம்
நேற்று இரவு வாட்ஸ் அப்பில் என்ன பிரச்சனை: வருத்தம் தெரிவித்த ஃபேஸ்புக்!

நேற்று இரவு 7.30 மணி முதல் வாட்ஸ் அப்பில் பிரச்சனை என பலரும் தெரிவித்தனர். இதனால் வாட்ஸ் அப்பை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என பல வதந்திகள் பரவியது. இதனால் வாட்ஸ் அப் பயன்படுத்தும் பலர் பதற்றமானார்கள்.
நேற்று இரவு வாட்ஸ் அப்பில் அனுப்பிய போட்டோக்கள், வீடியோக்கள் டவுன் லோடு ஆகவில்லை. டவுன்லோடில் பிரச்சினை உள்ளது, இன்னொரு முறை அனுப்பச் சொல்லுங்கள் என்று வாட்ஸ் அப் திரையில் காட்டியது. ஆனால் திரும்ப திரும்ப அனுப்பினாலும் டவுன் லோட் ஆகவில்லை. இந்த பிரச்சனை நேற்று இந்தியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா என உலகின் பல பகுதிகளில் இருந்தது.
வாட்ஸ் அப், ஃபேஸ்புக்,இன்ஸ்டாகிராம் போன்றவை ஃபேஸ்புக் சர்வரில் தான் இயங்குகின்றன. அதில் செய்யப்படும் சில மாற்றங்கள் காரணமாக தான் நேற்று இந்த பிரச்சனை உருவானதாக தகவல் பரவியது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் ஃபேஸ்புக் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த பிரச்சனை தொடர்பாக ஒரு பதிவை இட்டது.
அதில், பிரச்சினையை நாங்கள் அறிந்துள்ளோம். சிரமத்துக்கு வருந்துகிறோம், மீட்டெடுக்கும் பணியில் தீவிரமாக உள்ளோம் என்றும் இன்று காலை 6 மணிக்கு, பிரச்சினை கிட்டத்தட்ட முழுமையாக தீர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. விரைவில் 100% சேவையை தொடர்வோம் என கூறப்பட்டிருந்தது. அதேப்போல தற்போது வாட்ஸ் அப் சரியாக இயங்குகிறது. போட்டோக்கள் டவுன்லோட் ஆகிறது. பல பேர் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.



















