கட்டுரைகள்
கொடைக்கானல் குணா குகை – உயிரோடு வைக்கும் பிணவறை

ஊட்டியில் ஆங்கிலேயர்கள் அதிகம் குடியேறினர். ஊட்டிக்கு ரயில் பாதையே நிர்மாணம் செய்தனர். ஆனால் கொடைக்கானலில் அதை அவர்களால் செய்ய முடியவில்லை. ஏன் ? இன்று வரை அதை யாரும் செய்ய முடியும் என்று நினைத்து கூட பார்ப்பதில்லை. கொடைக்கானலில் ஆங்கிலேயர்கள் அதிகம் குடியேறவில்லை. ஏன் தெரியுமா ? இரக்கமில்லாத பள்ளங்கள், குகைகள்,இருட்டு தான் காரணம்.
தமிழகத்தில் ஆபத்தான மலைவாசஸ்தலம் என்றால் அது கொடைக்கானல் தான். 1850 ஆண்டு வாக்கில் அமெரிக்க மிஷனரிகளை மட்டும் தான் கொடைக்கானல் சற்று ஆரத் தழுவி கொண்டது, ஆனால் அவர்களாலும் பெரிதாக தாக்குப் பிடிக்க முடியவில்லை. மஞ்சு மூடும் கொடைக்கானலின் அதே அழகு தான் அதிக ஆபத்தான பகுதியாக கொடைக்கானலை வைத்திருக்கிறது.
தற்போது ‘குணா’ குகை என்று அழைக்கப்படுகிற குகைக்கு ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் ‘டெவில்ஸ் கிச்சன்’ (சாத்தானின் சமையலறை). மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் காட்டப்படுவது போலப் பல உயிர்களைப் பலி வாங்கிய அந்தப் பகுதியில் ‘குணா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்க, பின்பு ‘குணா கேவ்’ எனப் பெயர் மாற்றம் அடைந்திருக்கிறது.
இந்த பாறைகள் எல்லாம் எதோ நேற்று உருவானது அல்ல. பல மில்லியன் ஆண்டுகளாக உருவானவை. மழை பெய்து நீர் பாறையில் பல லட்சம் ஆண்டுகளாக பாய்ந்து வழ வழப்பு ஏற்பட்டு பாறைகள் இரண்டாக பிளந்து உள்ளே பல மடிப்புகள் ஏற்பட்டதன் விளைவே தற்போதையை வடிவத்தில் இருக்கும் Pillars Rock. இதற்கு சிக்கலான புவியியல் அம்சமங்கள் உள்ளன.
கொடைக்கானலிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள மொயர் பாயின்ட் சாலையில் அமைந்துள்ள குணா குகைகள், வழிநெடுக தேவதாரு மரங்களாலும் குன்றுகளாலும் சூழப்பட்டது. 2,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தக் குகைகள், பயணிகளைக் கூட்டம் கூட்டமாக ஈர்ப்பதற்கு ‘குணா’ படத்தினை தாண்டி அதில் நிறைந்திருக்கும் ஷோலா மரங்களின் முறுக்கப்பட்ட பின்னிப் பிணைந்த வேர்கள் பயணிகளுக்கு மர்ம உணர்வைத் தருகின்றன.
குணா போன்ற குகையில் விழும் நபர்கள் எவ்வாறு இறப்பார்கள் என தெரியுமா ? உடனே மரணம் நிகழ்ந்து விட்டால் ஒன்றும் தெரியாது. ஆனால் இவர்கள் உள்ளே விழும் போதே தலை,முதுகு,கை,கால் என பாறையில் நொறுங்கி தான் உள்ளே விழுவார்கள். அப்போதே பாதி உயிர் இருக்காது. சுய நினைவு திரும்பும் போது வெளிச்சமே இல்லாத இருட்டில் வௌவால் சத்தங்களுடன் குடலைப் பிடுங்கும் நாற்றத்துடன் தான் இருக்கும். காரணம் பாறையில் படிந்த பாசிகள் உருவாக்கும் வாடையில் வௌவால் எச்சமும் கலந்து அது ஒரு இருட்டு பிணவறை போல் தான் இருக்கும்.
உங்களால் கத்தவும் முடியாது. அப்படியே கத்தினாலும் மேலே கேக்காது. உறைய வைக்கும் குளிரில் உணவும் தண்ணீரும் இல்லாமல் நரக வேதனை அனுபவித்தே சுமார் நான்கு ஐந்து நாட்களில் இறந்து போவார்கள்.
பாதி உயிர் இருக்கும் போது அந்த மூன்று நான்கு நாட்கள் கண் முன் நாம் இருப்பது உண்மையா அல்லது கனவா அல்லது இறந்து நரகத்திற்கு வந்து விட்டோமா என்ற பித்துப் பிடித்த மனக்குழப்பத்தில் தான் கடைசி உயிர் பிரியும்.
உள்ளே விழுந்த உடலை யாராலும் மேலே கொண்டும் வர முடியாது. உறைய வைக்கும் குளிர் என்பதால் உடல் உடனே மக்கிப் போகவும் செய்யாது. உடல் சொத சொத என ரெட் வெல்வெட் கேக் போன்று இருந்து சில வாரங்கள் பிறகே உடல் மக்கி வெறும் எலும்பு கூடு மட்டும் மிஞ்சும்.
வனத்துறை அங்கே வரும் சுற்றுலாப் பயணிகளிடம் இவ்வளவு கறாராக இருப்பதில் தவறே இல்லை. தற்கொலை எண்ணம் உள்ளவர்களை விட்டுவிடலாம். ஆனால் வம்படியாக அந்த குகைக்குள் அப்படி என்ன தான் இருக்கு ன்னு ஊளை விட்டு கத்திட்டே அறியாமல் விழுந்து ரணக் கொடூரமாக அடிபட்டு இறப்பதற்கா நாம் இந்த பூமியில் பிறந்துள்ளோம் ?
மனிதர் உணர்ந்து கொள்ள இது சாதாரண குகைகள் அல்ல. அதையும் தாண்டி கொடூரமானது…..















