வணிகம்
பட்ஜெட் 2026: இல்லத்தரசிகள் எதிர்பார்ப்பு என்ன?

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து குடும்ப பொருளாதாரத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், வரவிருக்கும் ஒன்றிய பட்ஜெட்டில் நிவாரண நடவடிக்கைகள் அறிவிக்கப்பட வேண்டும் என இல்லத்தரசிகள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.
சமையல் எரிவாயு, காய்கறிகள், மளிகைப் பொருட்கள், பால், சமையல் எண்ணெய் உள்ளிட்ட தினசரி பயன்பாட்டு பொருட்களின் விலை உயர்வு, நடுத்தர மற்றும் குறைந்த வருமானக் குடும்பங்களின் மாதாந்திர செலவுகளை கடுமையாக பாதித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
இல்லத்தரசிகளின் கருத்துப்படி, மாத பட்ஜெட்டை நிர்வகிப்பதே பெரிய சவாலாக மாறியுள்ள நிலையில், சேமிப்பு குறைந்து அத்தியாவசிய செலவுகளுக்கே அதிக முன்னுரிமை வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளின் கல்வி, மருத்துவ செலவுகள் போன்றவை கூடுதல் சுமையாக இருப்பதால், ஒன்றிய பட்ஜெட்டில் சமையல் எரிவாயு விலை குறைப்பு, அத்தியாவசிய பொருட்களுக்கு GST தளர்வு, விலை கட்டுப்பாடு மற்றும் குடும்ப நல திட்டங்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
பொருளாதார நிபுணர்கள் கூறுவதாவது, இல்லத்தரசிகளின் செலவு முடிவுகள் நாட்டின் நுகர்வு தேவையை (Consumption Demand) நேரடியாக பிரதிபலிக்கின்றன. விலை உயர்வு நீடித்தால் நுகர்வு குறையும் அபாயம் உள்ளதாகவும், அது சில்லறை வணிகம் மற்றும் FMCG துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனால், வரவிருக்கும் ஒன்றிய பட்ஜெட் குடும்பச் செலவுகளை குறைக்கும் நடைமுறை தீர்வுகளை வழங்குமா என்பதே பொதுமக்கள் மத்தியில் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.








