இந்தியா
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றமும் கொந்தளிக்கும் உள்நாடும் வெளிநாடுகளும்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் 3 ம் தேதியும், மாநிலங்களவையில் 4 ம் தேதியும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக மோடி தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது. அதன் விளைவுகள், தொடர் விளைவுகள், பக்க விளைவுகள் என பல்வேறு பிரச்னைகள் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் விதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பிரதமர் சுற்றுப்பயணம் கிளம்பி விட்டார்.
4ம் தேதி தாய்லாந்தில் நடைபெற்று வரும் “பிம்ஸ்டெக்“ கூட்டமைப்பு நாடுகளிடையேயான உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று இந்த நாடுகளிடையேயான இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை நடைமுறையில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வது உள்ளிட்ட 21 முன்மொழிவுகளை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பரிந்துரைத்தார். அதன் பிறகு அங்கிருந்து இலங்கைக்கு புறப்பட்டுச் சென்ற மோடிக்கு கொழும்புவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று கொழும்புவில் அதானி சூரிய மின்சக்தி திட்டத்தினை தொடங்கி வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கவிருக்கிறார். மேலும் ஜே.வி.பி. கிளர்ச்சி நினைவு தினத்தில் இந்தியா இலங்கை இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவிருக்கிறார். நாளை மாலை தமிழ்நாடு வரும் பிரதமர் பாம்பன் ராமேஸ்வரம் இடையிலான புதிய மேம்பாலம் திறப்பு மற்றும் இப்பாலத்தின் வழியே ரயில் போக்குவரத்து தொடங்கி வைத்தல் ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.
இதனிடையே வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேறியதைத் தொடர்ந்து இப்பிரச்னை கொழுந்து விட்டு எரியும் நெருப்பாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளது.
இந்தியாவில் தமிழ்நாட்டில் பரவலாக பல்வேறு தர்காக்களில் இஸ்லாமியர்கள் கருப்புப் பட்டை அணிந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் பெருமெடுப்பிலான இஸ்லாமியர்கள் நாள்தோறும் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கி விட்டனர். பீகாரில் நிதிஸ்குமார் கடசியின் இஸ்லாமிய நிர்வாகிகள் ராஜினாமா செய்ததால் கட்சி இரண்டாக உடைகிறது.
இந்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் எம்பி முகமது ஜாவேத் மற்றம் ஓவைசி ஆகியோர் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். தமிழ்நாடு அரசும் ஒரு வழக்கு தொடர ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்த இந்தியாவில் முஜ்லீம்கள் தொழுகைக்காக இழிவுபடுத்தப்படுகிறார்கள். பசுவின் பெயரால் அடித்துக் கொல்லப்படுகிறார்கள். சைவத்தின் பெயரால் அவர்களின் கடையைப் புறக்கணிக்கிறார்கள். அடையாளத்திற்காக வாடகை வீடுகள் மறுக்கப்படுகிறார்கள். அவர்களின் வீடுகள் புல்டோசர்களால் இடிக்கப்படுகின்றன. இந்த அரசாங்கம் முஸ்லீம்களின் நலனுக்காக அந்த மசோதாவைக் கொண்டு வந்ததாக கூறுவது ஏற்க இயலாதது என்று எதிர்க்கட்சிகள் போர்க்குரல் எழுப்பி வருகின்றன.
இந்தியாவில் முஸ்லீம்களுக்கான வக்ஃப் சட்டம் போல பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இந்துக்களுக்கான வக்ஃப் வாரியங்கள் உள்ளன. இந்திய திருத்தத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் உள்ள இந்து வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கைகளும் ஊர்வலங்களும் நடந்து வருகின்றன. மகாபோதி நிர்வாகக் குழுவில் இந்துக்களை நீக்கக் கோரி பௌத்தர்கள் தீவிர போராட்டங்களை தொடங்கி விட்டனர்.
இப்படி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பற்றிக் கொண்ட இந்த வெறுப்பு தீயினால் சாதாரண பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் நாடுகளின் பொருளாதாரமும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் என்பதை புரிந்துகொண்டு அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் அமைதிக்கான முயற்சிகளில் ஈடுபடுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

