செய்திகள்
அரசு பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை இனி இ-சேவை மையத்திலேயே முன்பதிவு செய்யலாம் – விரைவில்.

அரசு பேருந்துகளில் தொலைதுாரம் செல்பவர்கள் முக்கிய பேருந்து முனையங்களில் முன்பதிவு செய்யும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இது மட்டுமல்லாமல் அரசு போக்குவரத்து கழக இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவும், அதற்கென பிரத்யேகமாக உள்ள டிஎன்எஸ்டிசி செயலி மூலமும் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கிராமப்புறங்களில் இருந்து பேருந்து பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையில் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அந்த எண்ணிக்கையை உயர்த்தவும் அதன்மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் ஏற்படுத்தவும் இ-சேவை மூலம் பேருந்து பயண டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுதும் தற்போது 530க்கும் மேற்பட்ட இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த இ-சேவை மையங்களில் பொதுமக்கள் எளிதாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்யவும் முடியும்.
ஆன்டிராய்டு ஃபோன், கணினி, லேப்டாப், டேப் போன்ற வசதிகள் இல்லாத பாமர மக்களும் இந்த இ-சேவை மையங்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி ஒருவரப்பிரசாதமாகவே இருக்கப் போகிறது. அதன்மூலம் அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதல் வருவாய் கிடைத்திடுவதும் உறுதியாகி உள்ளதால் இனி அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்க வேண்டிய அவசியம் இருக்கப் போவதில்லை என்பதும் மகிழ்ச்சிக்குரிய செய்திதானே.

