இந்தியா
இலங்கையின் நிலப்பரப்பும் கடற்பரப்பும் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படாது – அநுரகுமார திசநாயக.

இலங்கையில் சமீபத்திய பொருளாதார நெருக்கடிகளுக்கு பிறகு இலங்கை அரசு சீனாவிடம் அதிக அளவில் நிதி உதவி பெற்று புதிய திட்டங்களைத் தொடங்கியதும் பாதுகாப்பு தொடர்பான சீனாவுடனான ஒத்துழைப்பு நடவடிக்கைகளும் இந்திய அரசுக்கு நெருடலாகவே இருந்து வந்தது. இந்திய அரசும் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு புனருத்தாரன நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு சூரிய மின்சக்தி திட்டங்கள் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் என பல முன்னெடுப்புகளை செய்து தெற்காசிய பிராந்தியத்தில் தனது ஸ்திரத்தன்மையை நிலைநாட்டி வருகிறது.
இலங்கையுடன் ஏற்படுத்தப்பட்ட புதிய பாதுகாப்பு ஒப்பந்தங்களின்படி இருநாட்டுப் படைகளும் விரிவாக்கப்பட்ட கூட்டு இராணுவ பயிற்சிகள் மேற்கொள்ளுதல், செயலாக்க ஆலோசனைகள், தொழில்நுட்பம், தகவல் பரிமாற்றம் என பல்வேறு நடவடிக்கைகளில் பரஸ்பர பாதுகாப்பு கரிசனங்களின் அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறது.
இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயகவின் சமீபத்திய இந்திய பயணத்தின் போது இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து இணக்கம் காணப்பட்டது. எவ்வாறாயினும் இலங்கையின் நிலப்பரப்பையோ அல்லது கடற்பரப்பையோ இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என்ற உத்தரவாதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க வழங்கியுள்ளார்.
மீனவர்களின் பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் கையாளவும், தீர்வு காணவும் வேண்டும் என்றும் இருநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதித்து விடாமல் தீர்வை நோக்கி நகர வேண்டும் என்ற நிலைப்பாட்டை இரு தலைவர்களுமே வலியுறுத்தினர்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட நரேந்திர மோடி பத்திமுல்லவில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவுத்துாபிக்கு நேற்றைய தினம் அஞ்சலி செலுத்தினார்.
மலையகப் பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கான தனிவீட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. மேலும் மலையகத்தில் பெண்களுக்கான தாதியர் பயிற்சிக் கல்லூரி மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி உருவாக்குதல், கணிதம், ஆங்கிலம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான பயிற்சியாளர்கள் இந்தியாவிலிருந்து தருவிக்கப்படுதல், நுவரெலியா மாவட்டத்தில் இந்திய பல்கலைக்கழகம் ஒன்றின் வளாகத்தை தொடங்குவதோடு அதனை இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகமாக மாற்றுதல் ஆகிய பணிகள் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்பது குறித்து எவ்வித முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் ஏதும் இல்லை.
மேலும் இந்திய கடற்படைக்கு சொந்தமான “ஐ.என்.எஸ். சஹ்லாத்ரி” என்ற போர்க்கப்பல் அரசுமுறைப் பயணமாக சனிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை சென்று சேர்ந்திருக்கிறது. இக்கப்பல் இத்தீவில் தங்கியிருக்கும் காலத்தில் இருநாட்டு கடற்படையினரிடையே நட்புறவை மேம்படுத்தல், சுற்றுலாத் தளங்களை பார்வையிடல், உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திங்கள்கிழமை இக்கப்பல் அங்கிருந்து புறப்படும் என தெரிகிறது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களினால் இருநாட்டு இறையாண்மைக்கு எவ்வித பாதிப்போ அச்சுறுத்தலோ இருக்காது என்று இலங்கையின் பாதுகாப்பு செயலர் சம்பத் துய்யகொந்த தெரிவித்துள்ளார்.



