செய்திகள்
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: ஆ.ராசா கேள்விக்கு அதிமுகவின் பதில் என்ன?

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்தான விசாரணைக்கு அதிமுக அரசு ஒத்துழைக்க மறுக்கிறது என்று திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் இது குறித்து ஜெயக்குமார் பேசுகையில், ‘ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் இருப்பதால் அது குறித்து விசாரிக்க வேண்டும் என்று பொது மக்கள் கருதினார்கள். அந்த அடிப்படையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, விசாரணை ஆணையம் அமைத்தது. தற்போது அந்த ஆணையத்தின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை இருக்கிறது. அதே நேரத்தில் எப்போது தடை விலகுகிறதோ அப்போது விசாரணை மீண்டும் துவங்கப்படும். ஜெயலலிதாவின் மரணம் குறித்து யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் குறித்த உண்மையை வெளியே தெரிய வரும்’ என்று கூறினார்.
ஆ.ராசா தொடர்ச்சியாக அதிமுக அரசின் மீதும், அதன் முக்கிய நிர்வாகிகள் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். குறிப்பாக அவர் ஜெயலலிதா மீது குற்றம் நிரூபிக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி அதிகம் பேசி வருகிறார். ராசாவின் கருத்துகளுக்கு அதிமுக தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவ்விவகாரம் பற்றி ஜெயக்குமார், ‘திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. நில அபகரிப்புக் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளன. இது குறித்துப் பல்வேறு வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன. ஆனால், அதிமுகவில் இருக்கும் முக்கிய தலைவர்கள் மீது இப்படி வழக்கு ஏதும் நடந்து வருகிறதா?’ எனக் கேள்வி எழுப்பினார்.


















