உலகம்
இன்று மாலைக்குள் அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டும்: ஊழியர்களுக்கு டுவிட்டர் அதிரடி அறிவிப்பு!

டுவிட்டர் நிறுவனத்தின் ஆசிய பசுபிக் தலைமை அலுவலகம் சிங்கப்பூரில் இயங்கி வரும் நிலையில் அந்த நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் அனைவரும் இன்று மாலையே டுவிட்டர் அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் நாளை முதல் அனைவருக்கும் வீட்டிலிருந்து பணிசெய்யும் வொர்க் ப்ரம் ஹோம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டுவிட்டரில் ஆசிய பசிபிக் தலைமை அலுவலகமான சிங்கப்பூரில் உள்ள இன்று அனைத்து ஊழியர்களுக்கும் ஈமெயில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அலுவலகத்தை இன்று மாலை 5 மணிக்குள் காலி செய்துவிட்டு உடனடியாக ஊழியர்கள் வெளியேற வேண்டும் என்றும் நாளை முதல் அனைவரும் வீட்டில் இருந்து பணி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த நிலை தொடரும் என்றும் அலுவலகம் வந்து பணி செய்வதற்கு உரிய சூழல் ஏற்பட்டவுடன் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் சிங்கப்பூரில் உள்ள ஆசிய பசுபிக் மண்டலத்திற்கு நூர் அசார் என்பவர் முக்கிய பணிக்காக நியமனம் செய்யப்பட்ட நிலையில் அவர் பணியில் இணைந்த ஒரு சில நாட்களிலேயே இந்த முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டுவிட்டரின் ஆசிய பசிபிக் பிராந்திய அலுவலகமே காலியாவதற்கு முக்கிய காரணம், அந்த கட்டடத்திற்கான வாடகை இன்னும் செலுத்தாததால், கட்டிடத்தின் உரிமையாளர் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் சிங்கப்பூர் அலுவலகத்திற்கு காலி செய்வதற்கு வாடகை செலுத்தாததை காரணம் என்று கூறப்படுகிறது.
ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கடந்த சில மாதங்களாக பெரும் நஷ்டத்தில் இருந்து வருகிறார். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் அவர் சுமார் 15 லட்சம் கோடியை இழந்து உள்ளார் என்பதும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவரது சொத்து 26 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது அது 11 லட்சம் கோடியாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் பெரும் இழப்பை சந்தித்துள்ள எலான் மஸ்க் சிங்கப்பூரில் உள்ள ட்விட்டர் அலுவலகத்திற்கு வாடகை செலுத்தாமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ட்விட்டரில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது வாடகை செலுத்தாததால் அலுவலகமே காலி செய்யப்பட்டது ட்விட்டர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.