இந்தியா
பத்திக்குச்சியை சொருக சமோசாவா? நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளான புகைப்படம்..!

விஜயகாந்த் நடித்த ’வானத்தைப்போல’ என்ற திரைப்படத்தில் ஹோட்டல் ஒன்றில் மைசூர்பாகுவை எடுத்து ஆடும் மேசையை முட்டுக் கொடுப்பதற்காக வைப்பார்கள். அந்த அளவுக்கு மைசூர்பாகு கடினமாக இருக்கிறது என்பதை நகைச்சுவையாக காட்டுவதற்கு அந்த காட்சி உருவாக்கப்பட்டு இருக்கும். அந்த வகையில் மும்பையை சேர்ந்த ஸ்வீட் கடை ஒன்றில் சமோசாவின் மேல் பத்தி குச்சியை சொருகி வைத்திருந்த புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
சமோசாவில் பத்தி குச்சிகள் குத்தப்பட்டிருக்கும் இந்த புகைப்படம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது என்பதும் இது வழக்கத்திற்கு மாறான நடைமுறையாக இருப்பதால் பலரது கமெண்ட்ஸ்களையும் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷிகர் என்ற ட்விட்டர் பயனாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் மும்பையில் உள்ள சிற்றுண்டி கடைக்கு சென்றபோது ஜிலேபிக்கு அருகில் ஒரு சமோசா இருந்ததாகவும், மேசை மேல் வைக்கப்பட்டிருந்த அந்த சமோசாவின் மேல் பத்திக்குச்சிகள் குத்தப்பட்டிருந்தது என்பதையும் பார்த்து அதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவு செய்தார். சமோசா பிரியர்களே அகர்பத்திக்காக ஒரு சமோசாவை பயன்படுத்துவதை பார்த்தேன் என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பலர் உணவுப் பொருட்களின் மீது பத்திக்குச்சிகள் இருந்தது குறித்து வேடிக்கையாகவும் நகைச்சுவையாவும் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றார்கள். ஆனால் இந்திய கலாச்சாரத்தில் இது ஒரு பொதுவான பாரம்பரியம் என்றும் கடவுளுக்கு பிரசாதமாக வைப்பதற்காக ஒரு சிலர் உணவுப் பொருட்கள் மீது பத்தி குச்சிகளை வைப்பது வழக்கம் என்றும் சிலர் கமெண்ட்ஸ் பதிவு செய்து இருக்கின்றனர்.
குறிப்பாக வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களில் பத்திக்குச்சியை வைப்பது பழக்கம் என்றும், கடைகளை பொருத்தவரை முதல் முதலாக செய்த பலகாரத்தை பிரசாதமாக கடவுளுக்கு படைக்கும் பொருட்டு அதில் பத்திக்குச்சி வைப்பார்கள் என்றும் சிலர் கமென்ட் அளித்து வருகின்றனர், ஆனால் பெரும்பாலானோர் இந்த புகைப்படத்தை பார்த்து கேலியும் கிண்டலம் செய்து வருகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை இந்து மத சடங்குகளில் பத்திக்குச்சி ஏற்றுவது என்பது ஒரு பிரார்த்தனையின் முறை என்றும் பத்திக்குச்சியின் புகை நறுமணம் தெய்வீகத்தன்மையுடன் இருக்க உதவுகிறது என்றும் ஆன்மீக சூழலை உருவாக்குகிறது என்றும் அதனால் பத்திக்குச்சிக்கு என ஸ்டாண்ட் இருந்தாலும் உணவுப் பொருள்கள் மீது குத்தி வைப்பது பெரும்பாலானவர்களை வழக்கமாக இருக்கிறது என்றும் கூறப்பட்டு வருகிறது.