தமிழ்நாடு
பட்டாணி, வளம், வளர்ச்சி: அதிமுகவை கிண்டலடிக்கும் டிடிவி தினகரன்!

அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெரிய அளவில் கூட்டணி எதுவும் அமைக்காமல் அதிமுக, திமுக கூட்டணிகளை எதிர்த்து மக்களவை தேர்தலில் களமிறங்கியுள்ளார். அதிமுகவின் 90 சதவீத தொண்டர்கள் தங்கள் பக்கம் இருப்பதாக அவர் தொடர்ந்து கூறி வருகிறார். அவர்கள் ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெறுவோம் எனவும் அவர் கூறுகிறார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியிடம், அதிமுகவின் 90 சதவிகித தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என தினகரன் கூறி வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அதனை ஒரு கட்சியாகவே நான் நினைக்கவில்லை. அமமுக என்று ஒரு கட்சியை பதிவு செய்திருக்கிறார்களா? பிறக்காத குழந்தைக்கு பெயர் வைத்ததுபோல அந்தக் கட்சி உள்ளது என்றார்.
இந்நிலையில் முதல்வரின் இந்த கருத்து குறித்து திருச்சியில் டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தினகரன், எதற்காகப் பதிவு செய்யவில்லை என்பது எல்லாருக்கும் தெரியும். அதிமுகவின் ஓர் அணிதான் பொதுச்செயலாளர் தலைமையில் இருக்கிற எங்கள் இயக்கம் என்று உச்ச நீதிமன்றமே சொல்லியிருக்கிறது. இந்நிலையில் நாங்கள் தனியாக கட்சிப் பதிவு செய்தால் அதிமுகவில் எங்களுக்கு இருக்கும் உரிமை போய்விடும். அதனால் நாங்கள் பதிவு செய்யவில்லை.
25-ஆம் தேதி எங்களுக்கு நாங்கள் எதிர்பார்க்கும் சின்னம் கிடைக்கும். அதற்குப் பிறகு பாருங்கள், அவர்கள் எங்கு போகப் போகிறார்கள் என்று. அம்மாவின் தாரக மந்திரமான அமைதி வளம் வளர்ச்சி என்பதற்கு ஆங்கிலத்தில் பட்டாணி, வளம், வளர்ச்சி என்று அச்சடித்திருக்கிறார்கள். அவர்களின் பட்டாணி அறிக்கையெல்லாம் இந்தத் தேர்தலோடு முடிந்துவிடும் என கிண்டல் செய்தார்.





















