இந்தியா
இன்று வெளியான தமிழ்நாடு 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – சில சுவாரசியமான செய்திகள்

இன்று வெளியான தமிழ்நாடு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பார்க்கும்போது 2022ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக தேர்ச்சி விகிதம் உயர்ந்து கொண்டே வருவது கண்கூடாக தெரிகிறது.
2022 ம் ஆண்டு – 93.76 சதவீதம்
2023 ம் ஆண்டு – 94.03 சதவீதம்
2024 ம் ஆண்டு – 94.56 சதவீதம்
2025 ம் ஆண்டு – 95.03 சதவீதம்
இந்த ஆண்டு தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் – 7,92,494 பேர்
தேர்ச்சி பெற்ற மொத்த மாணவர்கள் – 7,53,142 பேர்
மாணவர்கள் தேர்ச்சி விகிதம் – 96.70 சதவீதம்
மாணவிகள் தேர்ச்சி விகிதம் – 93.16 சதவீதம்
முதலிடம் பிடித்த மாவட்டம் – அரியலூர்
கடைசி இடம் பிடித்த மாவட்டம் – வேலூர்
இரு பாலர் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 95.30 சதவீதம்
ஆண்கள் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 90.14 சதவீதம்
பெண்கள் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 96.50 சதவீதம்
அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 91.94 சதவீதம்
அரசு உதவி பெறும் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 95.71 சதவீதம்
தனியார் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 98.88 சதவீதம்
3162 அரசுப் பள்ளிகளில் இருந்து 1,54,366 மாணவர்கள் மற்றும் 1,96,839 மாணவியர்கள் என மொத்தம் 3,51,205 மாணாக்கர்கள் எழுதிய நிலையில் 91.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் சுமார் 446 அரசுப் பள்ளிகளில் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பழனியைச் சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலியும் பல்லடத்தைச் சேர்ந்த மளிகைக் கடைக்காரரின் மகன் மாணவன் ராகுலும் 600-க்கு 599 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தை பெற்று அசத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 140 சிறைவாசிகள் தேர்வு எழுதியதில் 130 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.
8019 மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதியதில் 7466 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.
மேலும் சில சுவாரசிய தகவல்கள் இதோ உங்கள் பார்வைக்கு …
தமிழ் மொழிப்பாடத்தில் 135 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு மேல்நிலை பள்ளியில் பயின்ற இரு கைகளையும் இழந்த கீர்த்திவர்மா என்ற மாற்றுத் திறனாளி மாணவர் 600-க்கு 471 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.
திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கொத்தகோட்டை பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி சுகாசினி கடந்த மார்ச் 25ம் தேதி தேர்வு எழுதுவதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த போது, அரசு பேருந்து நிற்காமல் நிற்காமல் சென்ற நிலையில் வெறியுடன் ஓடிச் சென்று தேர்வை எழுதிய அவர் 600-க்கு 437 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே கடந்த 21ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்த மாணவன் சுகுமார் 600-க்கு 443 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்வு முடிவுகளைப் பார்த்த அரவது தாயார் எனது மகன் உயிரோடு இருந்திருந்தால் கலெக்டர் ஆகியிருப்பான் என அழுது புலம்பினார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் படுகை புதுத் தெருவைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி மகள் ஆர்த்திகா தேர்வு சரியாக எழுதவில்லை என தற்கொலை செய்து கொண்டார். அவர் 600-க்கு 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜுன் 25ம் தேதி முதல் துணைத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி நிறைந்து உயர் கல்விக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் பெற்றோர்கள் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், விரும்பிய துறைகளைத் தேர்ந்தெடுக்க ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் தேர்ச்சி பெற இயலாத மாணவர்கள் துவண்டுவிடாதீர்கள். நீங்களும் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற்றே தீருவீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை தொடர்பு கொண்டு மனநல மருத்துவர்களை கொண்டு ஊக்கமளித்து ஆலோசனை வழங்கிட தமிழ்நாடு அரசு 14416 என்ற கட்டணமில்லா தொலைபேசி வசதியை அறிவித்துள்ளது.















