தமிழ்நாடு
சென்னையில் ஒரே ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது என்பதும் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் இந்த தேர்தல் சுமூகமாக நடந்து முடிந்தது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை இருவர் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை வேளச்சேரியில் தொகுதியிலுள்ள 92ஆம் எண் வாக்குச்சாவடியில் வரும் 17ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வரும் 17ஆம் தேதி மேற்குவங்க மாநிலத்தில் ஐந்தாம் கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நாளில் வேளச்சேரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





















