செய்திகள்
பொங்கல் பரிசு 2026: பானை மற்றும் அடுப்பு சேர்த்து வழங்க கோரிக்கை – மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் தீர்மானம்!

பொங்கல் பரிசு 2026: புதிய பானை & அடுப்பு வழங்க கோரிக்கை – மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது.
2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த முறை பொங்கல் பரிசில் கூடுதல் நன்மைகள் சேர்க்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம், அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் களிமண் பானை மற்றும் புதிய அடுப்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
சென்னையில் மாநில தலைவர் சேம நாராயணன் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 13 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய தீர்மானங்கள்
அரசு வழங்கும் பொங்கல் பரிசுடன் புதிய களிமண் பானை மற்றும் அடுப்பு வழங்க வேண்டும்.
பருவமழை காலங்களில் தொழில் செய்ய முடியாததால், மழைக்கால நிவாரண உதவி ரூ.5,000-ஐ, ரூ.10,000 ஆக உயர்த்த வேண்டும்.
மின்சாரத்தால் இயங்கும் மின் சக்கரங்களை அனைத்து பதிவு செய்யப்பட்ட மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும்.
பல ஆண்டுகளாக மண்பாண்ட தொழிலில் உள்ளவர்களுக்கு வீடு மற்றும் தொழில் செய்யும் இடத்திற்கான அடிமனை பட்டா வழங்கப்பட வேண்டும்.
உழவர் சந்தைகளில் மண்பாண்ட பொருட்கள் விற்பனைக்கு தலா இரண்டு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
மண்பாண்ட தொழிலாளர்களின் நலனுக்காக இந்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.




