தமிழ்நாடு
சசிகலா உடல்நலம் பெற ஓ.பி.எஸ் மகன் பிரார்த்தனை – கலக்கத்தில் அதிமுக!!!

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறையிலிருந்து விடுதலை ஆனார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். அதேபோல கடந்த 27 ஆம் தேதியன்றே ஜெயலலிதாவின் நினைவிடமும் மெரினா கடற்கரையில் திறக்கப்பட்டுள்ளது. இப்படி இரண்டு சம்பவங்களும் ஒரே நாளில் நடந்தது அதிமுகவினர் மத்தியில் சலசலப்புக்கு வழி வகுத்தது. இதற்கு அச்சாரம் போடும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன், ‘அம்மாவின் நினைவிடம் திறக்கப்பட்டதே சின்னமாவுக்காகத் தான்’ என்று புது வித விளக்கத்தைக் கொடுத்தார்.
சசிகலா விடுதலை பெற்றுள்ளதால், விரைவில் அதிமுக – அமமுக இணைப்பு சாத்தியப்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் இந்த கருத்துக்கு மேலும் வலு சேர்க்கும் வகையிலான காரியத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஈடுபட்டுள்ளது. அவரின் இளைய மகன் ஜெயபிரதீப், சசிகலாவுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என்று திடீர் பதிவு போட்டுள்ளார்.
ஜெயபிரதீப் தன் ட்விட்டர் பக்கத்தில் இட்ட பதிவு வருமாறு:
— Jayapradeep (@VPJayapradeep) January 28, 2021
இப்படியான சூழலில் சசிகலா விடுதலை குறித்து சில நாட்களுக்கு முன்னர் பேசியிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘சசிகலா, மீண்டும் அதிமுகவில் இணைய 100 சதவீதம் வாய்ப்பு என்பதே கிடையாது. அவர் கட்சியிலேயே இல்லை. அதைப் போல தினகரனும் அதிமுகவில் இல்லை. அதிமுக என்பது பெரிய இயக்கம். இதில் பலர் வரலாம், போகலாம். ஆனால், கட்சி இருக்கும்.
தினகரனை, ஜெயலலிதா ஒதுக்கியே வைத்திருந்தார். அவர் உயிருடன் இருக்கும் வரை தினகரனை அதிமுகவில் சேர்க்கவே இல்லை’ எனக் கூறினார். இப்படி குழப்பமான சூழலில் தான் அதிமுக நிலைமை இருக்கிறது.




















