இந்தியா
பயன்படுத்திய பொருட்களை மட்டுமே விளம்பரம் செய்ய வேண்டும்: நடிகர், நடிகைகளுக்கு கட்டுப்பாடு..!

நடிகர் நடிகைகள் ஒரு பொருளை விளம்பரப்படுத்தினால் அந்த பொருளை அவர்கள் பயன்படுத்தி திருப்தி ஆகியிருக்க வேண்டும் என்றும் பயன்படுத்தாத பொருளை விளம்பரம் செய்யக்கூடாது என்றும் மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நடிகர் நடிகைகள் பல பொருள்களை விளம்பரம் செய்கிறார்கள் என்பதும் அந்த விளம்பரத்தை நம்பி ஏராளமானோர் அந்த பொருள்களை வாங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நுகர்வோர் வாங்கும் பொருள் தரமற்றதாக இருந்தால் அதற்கு விளம்பரம் செய்பவர்களும் பொறுப்பு என்றும் இது குறித்து பல வழக்குகள் பதிவாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் கூட ஷாருக்கான் மனைவி கெளரிகான் விளம்பரம் செய்ததால் தான் அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கியதாகவும் ஆனால் அந்த அப்பார்ட்மெண்ட் நிர்வாகம் தன்னை மோசடி செய்து விட்டதாகவும் கூறி ஷாருக்கான் மனைவி மீது மும்பை சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விளம்பரம் செய்யும் பிரபலங்கள் அந்த பொருளை கண்டிப்பாக பயன்படுத்திருக்க வேண்டும் என்றும் பயன்படுத்தாத பொருள்களை விளம்பரம் செய்யக்கூடாது என்றும் விளம்பரம் செய்த பொருள் தன்னை முழுமையாக திருப்திப்படுத்தியது என்று உறுதிமொழி கூற வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விளம்பரம் பணம் வாங்கிக் கொண்டு செய்யப்பட்டதா என்பது குறித்து தெளிவாக விளக்கப்பட வேண்டும் என்றும் நுகர்வோர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான மொழியில் விளம்பரம் இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஒரு திரைப்படத்தில் நடிப்பதை விட ஒரு சில நிமிடங்களில் நடிக்கும் விளம்பர படங்களில் கோடி கணக்கில் நடிகர் நடிகைகள் சம்பாதித்து வரும் நிலையில் மத்திய அரசின் இந்த கட்டுப்பாடு அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் விளம்பரங்களை நம்பி மோசமாகும் பயனர்களுக்கு இது உண்மையிலேயே மகிழ்ச்சி தரக்கூடிய அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேல் நடிகர் நடிகைகள் தங்கள் பயன்படுத்தாத திருப்தி அடையாத பொருள்களை விளம்பரம் செய்து அதனால் ஏற்படும் விளைவுக்கு அவர்களும் பொறுப்பாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.