தமிழ்நாடு
ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய சிக்கல்: பொருட்களை வாங்க முடியாமல் தவிப்பு!

பயோமெட்ரிக் முறையில் ஏற்படும் பிரச்சனை காரணமாக ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கடந்த சில மாதங்களாக பயோமெட்ரிக் முறையில் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயோ மெட்ரிக் மெஷின் சில சமயம் சரியாக வேலை செய்யவில்லை என்பதால் பொதுமக்கள் பொருட்களை வாங்க முடியாததால் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்த பயோ மெட்ரிக் முறையில் அட்டைதாரர்கள் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். அந்த விரல் ரேகை ஏற்கனவே ஆதார் அட்டையில் உள்ள விரல் ரேகையுடன் ஒத்துப்போனால் மட்டுமே பொருட்களை வாங்க பயோமெட்ரிக் மெஷின் அனுமதிக்கும்.
ஆனால் பலருடைய விரல்ரேகை ஆதார் அட்டையில் உள்ள விரல்ரேகையுடன் ஒத்துப் போகவில்லை என்பதால் பயோமெட்ரிக் இயந்திரம் விரல் ரேகையை ஏற்க மறுக்கிறது. இதனால் மீண்டும் தாலுகா அலுவலகம் சென்று விரல் ரேகையை புதுப்பிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. விரல்ரேகை புதுப்பித்து வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என்பதால் அதுவரை ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரச்சனையை சரிசெய்ய நவீன பயோமெட்ரிக் முறை இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் சிக்னல், நெட்வொர்க் குறைபாடு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரேஷன்கடை அதிகாரிகளை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

















