தமிழ்நாடு
நீட் தேர்வு பயிற்சி தொடரும்: அமைச்சரின் அறிவிப்பால் மாணவர்கள் குழப்பம்!

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் திடீரென நீட் தேர்வுக்கான பயிற்சி தொடரும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழகம் மட்டும் நீட் தேர்வை ஏற்றுக் கொள்ளாமல் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என போராடி வருகிறது. சமீபத்தில்கூட தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த தீர்மானம் விரைவில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்க தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்துவோம் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் அடுத்த வருடமாவது திமுக அரசு நீட் தேர்வை இல்லாமல் செய்துவிடும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வு பயிற்சி தொடரும் என இன்று பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வு முடிவு வந்தவுடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் திறனை மேம்படுத்துவது குறித்தும் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
ஒரு பக்கம் நீட் தேர்வுக்கு விலக்கு என சட்ட போராட்டம் நடத்தி வரும் திமுக அரசு இன்னொரு பக்கம் நீட்தேர்வு பயிற்சியும் தொடரும் என்று அறிவித்துள்ளது முரண்பாட்டின் மொத்த உருவமாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்





