கிரிக்கெட்
தமிழகத்துச் சிங்கம் நடராஜனுக்கு சின்னப்பம்பட்டியில் கொடுக்கப்பட்ட உற்சாக ‘ரத வரவேற்பு’; வைரல் வீடியோ!

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மிக நீண்ட தொடர் சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது. ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்த இந்திய அணி, 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
இதில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி, 2-1 என்ற ரீதியில் கைப்பற்றியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி, டி20 தொடரை 2-1 என்று கைப்பற்றியது. பின்னர் ஆரம்பித்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி, வரலாற்றுப் படுதோல்வி அடைந்தது. எப்படியும் டெஸ்ட் தொடரில் 4-0 என்ற கணக்கில் இந்தியா மண்ணைக் கவ்வும் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான்கள் கணித்துக் கொண்டிருந்தனர்.
அதற்கு ஏதுவாக இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, சொந்த காரணங்களுக்காக தாயகம் திரும்பினார். பல முன்னணி வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டது. குழப்பமான சூழலில் களமிறங்கிய இந்திய அணி, அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்டது.
தொடர்ந்த நடந்த மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற வேண்டியிருந்தது. ஆனால் தன் அசாத்திய பேட்டிங் மூலம் இந்திய அணி, அந்த வெற்றியைத் தடுத்து நிறுத்தி ஆட்டத்தை டிரா செய்தது.
எல்லா பகைகளையும் தீர்த்துக் கொள்ள ஏதுவாக கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி அமைந்தது. முழு பலத்துடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. இந்தியா சார்பில் அந்தப் போட்டியில் மட்டும் இரண்டு வீரர்கள் முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாயினர். இருவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான். ஒருவர் வாஷிங்டன் சுந்தர், இன்னொருவர் நடராஜன்.
இரண்டு பேரும் தங்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் மூலம் ஆஸ்திரேலிய அணியை மிரட்டினர். அவர்களின் பங்களிப்பின் மூலமும், குழுவாக இந்திய அணியின் செயல்பாடு மூலமும் வலுவான ஆஸ்திரேலிய அணி வீழ்த்தப்பட்டது. தொடரையும் இந்தியா 2- 1 என்ற ரீதியில் கைப்பற்றி கெத்துக் காட்டியது.
ஆஸ்திரேலிய தொடருக்கு நெட் பவுலராக பறந்தவர் நடராஜன். 3வது ஒருநாள் போட்டியில் அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் அவர் சிறப்பாக செயல்படவே, அடுத்து டி20 தொடரிலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து டெஸ்ட் தொடரிலும் களமிறங்கினார். தான் களமிறங்கிய அனைத்து வித போட்டிகளிலும் தன் திறமை மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் நடராஜன்.
ஒரே தொடரில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான முதல் வீரர் என்ற பெருமையையும் நடராஜன் பெற்றார்.
இப்படி சாதனைகள் பல குவித்து, சேலம் மாவட்டத்தில் இருக்கும் தன் சொந்த கிராமமான சின்னப்பம்பட்டிக்குத் திரும்பியுள்ளார் நடராஜன். அவரை ரதத்தில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்று கிராம மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். இது குறித்தான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
வீடியோ இதோ:
After making his international cricket debut and the historic test series win in Australia, Indian cricketer T Natarajan was given a grand welcome upon his arrival at the Chinnappampatti village in Salem district. pic.twitter.com/hAlZuwOGKP
— Shilpa Nair (@NairShilpa1308) January 21, 2021



















