தமிழ்நாடு
“மிஸ்டர் எடப்பாடி… அது நியாபகம் இருக்கட்டும்..!”- தேர்தலுக்குப் பின்னரும் விடாமல் விளாசும் ஸ்டாலின்

சென்னையில் உள்ள பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு ‘பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை’ என்னும் பெயர் இருந்து வருகிறது. இந்நிலையில் அங்கு நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்ட புதிய பதாகையில், பெரியாரின் பெயருக்கு பதிலாக ‘கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
அவர், ‘தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என 1979-ல் பெயர் சூட்டினார் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள். 40 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் பல ஏற்பட்டபோதும் அந்தப் பெயரே நீடித்து வந்த நிலையில், தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பலகையில் Grand Western Trunk Road என எழுதப்பட்டிருப்பதும், நெடுஞ்சாலைத் துறை இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியதாகும்.
ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையை Grand Western Trunk Road என மாற்றிட காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது?
எஜமானர்கள் கால்பிடிக்கும் வேலையா? தந்தை பெரியார் பெயர் கேட்டாலே நடுங்கும் மதவெறி சக்திகளின் ஆட்டமா?
உடனடியாக மாற்றிடுக!
தாமதித்தால் மே.2-க்குப் பிறகு ஆணை வெளியாகும்! pic.twitter.com/luDmTSD1YT
— M.K.Stalin (@mkstalin) April 13, 2021
தமிழகத்தில் அ.தி.மு.க.வின் காபந்து சர்க்காருக்கு இன்னும் சில நாட்களே மிச்சமிருக்கும் நிலையில், இந்தத் திரிபு வேலைக்கான உத்தரவு எங்கிருந்து வந்தது? அ.தி.மு.க.வின் நிறுவனரான எம்.ஜி.ஆர். சூட்டிய பெயரையே மாற்றும் அளவுக்கு காபந்து அரசு, தனது டெல்லி எஜமானர்களின் கால் பிடிக்கும் அரசாக இருக்கிறதா? அல்லது, தந்தை பெரியார் பெயரைச் சொன்னாலே நடுநடுங்கும் மதவெறி சக்திகளின் அதிகார ஆட்டமா?
எதுவாக இருந்தாலும், மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என உடனடியாக மாற்றம் செய்திட வலியுறுத்துகிறேன். தாமதம் செய்தால், மே 2-க்குப் பிறகு அதிகாரபூர்வ ஆணை வெளியாகும் நிலை ஏற்படும் என்பதை நினைவில் கொள்க’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.






















