தமிழ்நாடு
கவனமா இருங்கள் மக்களே.. உங்களுடைய இந்த ஆவணங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் மற்றவர்களிடம் இருக்கக் கூடாது… எச்சரிக்கை…

இந்த நவீன யுகத்தில் எந்த பிரச்னை யாருக்கு எப்படி வரும் என்றே அறுதியிட்டுக் கூறமுடியாது. இப்படியிருக்க நம்மிடம் மட்டுமே இருக்க வேண்டிய சில ஆவணங்களையோ அவற்றின் நகல்களையோ யாரிடமும் விட்டு வைக்காதீர்கள். .
ஆதார் கார்டு, பான் கார்டு, ஏடிஏம் கார்டு, காசோலைகள், கையெழுத்து போடப்பட்ட வெள்ளை பேப்பர் மற்றும் எழுதாமல் காலியாக உள்ள பத்திரங்கள், பிராமிசரி நோட்டுகள், கடனுறுதி பத்திரங்கள், சொத்து ஆவணங்கள், பாஸ்போர்ட் ஆவணங்கள், வாகனத்தின் ஆர்.சி.புக் உள்ளிட்ட சில ஆவணங்கள் ஆகியவற்றை எப்போதும் மற்றவர் கைக்கு கிடைக்காதவாறு பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
அவற்றால் என்ன பிரச்னைகள் வரும் என்பதை விளக்கமாக சொல்கிறேன். குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
முதலாவதாக காசோலைகள்.
யாரிடமாவது கடன் வாங்கும் போதோ அல்லது சில நிறுவனங்களிடமிருந்து சில பொருள்களையோ அல்லது புதிய வாகனங்கள் வாங்கும் போதோ அல்லது லேப்டாப் உள்ளிட்டவற்றை கடனில் வாங்கும் போதோ உங்களுக்கு கடன் கொடுப்பவர்கள் உங்களின் கையொப்பமிட்ட இரண்டு அல்லது மூன்று தொகை எழுதப்படாத காசோலைகளை பிணையாக கேட்பார்கள். அவ்வாறு நீங்கள் கொடுத்தால் உங்களுடைய கடனை நீங்கள் முழுமையாக செலுத்தி விட்ட பின்னர் அந்த காசோலைகளை கண்டிப்பாக திரும்ப கேட்டு வாங்கி அவற்றை அழித்துவிட வேண்டும். இல்லையென்றால் உங்களுடைய காசோலையை வைத்துள்ள நபர் அதில் ஏதாவது தொகை எழுதி பணமாக்கி உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விடுவார்கள். அல்லது அதிகமான தொகையை அதில் எழுதி வங்கியில் கொடுத்து உங்கள் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்தால் செக் மோசடி புகாருக்கு நீங்கள் ஆளாகிட நேரும். அல்லது மிக மிக அதிகமான ஒரு தொகையை எழுதி வங்கியில் கொடுத்துவிட்டு உங்கள் மீது நீங்கள் அவரிடம் கடனாக பெருந்தொகை பெற்றதாகவும் அந்த தொகையை திருப்பி கேட்ட போது அந்த காசோலையை கொடுத்து தங்களை ஏமாற்றி விட்டதாகவும் பொய் புகார் அளித்து நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளும் பட்சத்தில் காசோலையில் அந்த நபர் எழுதிய தொகையை நீங்கள் கட்டாயமாக கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். காசோலைகளில் கையெழுத்து போடும்போது காசோலை புத்தகத்திலிருந்து ஒரு காசோலையை தனியாக பிரித்து பின்னர் கையெழுத்து போட வேண்டும். அப்படியே போடும்போது அடுத்து உள்ள காசோலையைில் உங்கள் கையெழுத்து தடம் பதிந்திருந்தால் அதை வேறு யாராவது எடுத்து தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு உண்டு.
அதே போல்தான் வாகனத்தையும் அதன் ஆர்.சி.புத்தகத்தையும் யாரிடமும் கொடுத்து வைக்காதீர்கள். அவ்வாறு நீங்கள் கொடுத்து வைத்திருக்கும்போது அவர்கள் அந்த வாகனத்தைப் பயன்படுத்தி ஒரு விபத்து ஏற்படுத்தி விட்டாலோ அல்லது அந்த வாகனத்தை தவறான காரியங்களுக்கு பயன்படுத்தினாலோ வாகன உரிமையாளர் என்ற முறையில் அதற்கு பொறுப்பு சொல்லி தேவையற்ற சங்கடங்களுக்கு ஆளாக வேண்டி வரும்.
அடுத்து உங்களுடைய மொபைல்போன். இப்போதெல்லாம் எல்லோரும் அவரவரின் போனில் வங்கி கணக்கை இணைத்து வைத்து பணம் பரிமாற்றம் செய்வதும் பல்வேறு ஆவணங்களின் ஸ்கேன் காப்பிகளை மொபைல்போனில் பாதுகாத்து வைத்திருப்பதும்அடுத்தவர் கையில் கிடைக்கும் போது தவறாக பயன்படுத்த வாய்ப்புண்டு.
இந்த போனில் இன்னுமொரு பெரிய சங்கடம் வரும் என்பது உங்களுக்குத் தெரியுமா?.. நீங்கள் கடைக்கு சென்றிருக்கும் போதோ அல்லத வாகனங்களில் பயணம் செய்து கொண்டிருக்கும் போதோ உங்களுக்கு அறிமுகமில்லாத நபர் அவசரமாக ஒரு “கால்“ பேசிவிட்டு தருகிறேன். கொஞ்சம் உங்கள் போனை கொடுங்கள் என்று கேட்டால் கொடுத்து விடாதீர்கள். அப்படி பெறும் நபர் ஏதாவது சமூக விரோத செயலுக்கு உங்கள் போனை பயன்படுத்தி விட்டால் நீங்கள் தேவையற்ற சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும்.
எனவே உங்களின் மதிப்பு மிக்க ஆவணங்களையும் உபகரணங்களையும் நீங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள் மக்களே…















