இந்தியா
ஆகஸ்ட் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு, திரையரங்குகளை திறக்கலாம்: முதல்வர் அதிரடி அறிவிப்பு!

மேற்குவங்க மாநிலத்தில் ஆகஸ்ட் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் கோவிட் கால கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 15 வரை நீடிக்கப்பட்டு உள்ளதாகவும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாகனங்களுக்கு தடை தொடரும் என்றும் ஆனால் அதே நேரத்தில் நாளை முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதேபோன்று உள்ளரங்க நிகழ்ச்சிகளில் 50 சதவீத நபர்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது.
கடந்த 16ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவையை 50% பயணிகளுடன் இயங்கி வருகிறது. அதே போல் பேருந்துகள் டாக்ஸிகள் ஆகியவைகளும் குறைந்த பயணிகளிடம் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. மின்சார ரயில்களில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் மாநில அரசு அனுமதித்துள்ள நிலையில் அதே நிலை தொடரும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தை போலவே தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை செய்ய உள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் செயலாளர் அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனையில் கலந்து கொள்ளவுள்ளனர்.
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் கிடைக்குமா அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.





















