செய்திகள்
இந்த ஆண்டு ஜுன் 12ம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படுமா?

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12ம் தேதி டெல்டா பகுதி குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு சரியான தேதியில் திறக்கப்படுமா அல்லது தள்ளிப் போகுமா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
இன்று ஜுன் 2ம் தேதி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 81,983 மில்லியன் கன அடியாக உள்ளது. இது இந்த அணையின் மொத்த கொள்ளளவாகிய 93,470 மில்லியன் கன அடியில் 87.71 கதவீதமாக உள்ளது.
மேட்டூர் அணையின் மொத்த நீர் மட்டமான 120 அடியில் தற்போது உள்ள நீர் மட்டம் 112.48 அடியாக உள்ளது. இது இன்றைய தேதியில் சென்ற ஆண்டு இருந்த அளவை விட கூடுதலான அளவாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 3,017 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 1,003 கன அடி நீர் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக வாய்க்கால்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சென்ற வாரமும் இந்த வாரமும் தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக அணையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளதால் இந்த ஆண்டு குறுவைப் பாசனத்திற்கான நீர் திறப்பு திட்டமிட்டபடி ஜுன் 12 ம் தேதி இருக்கும் என உறுதியான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
தமிழ்நாடு அரசும் ஜுன் 12ம் தேதி நீர் திறப்பதற்கான அறிவிக்கையை வெளியிட்டு அதற்கான ஆயத்தப் பணிகளில் அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டுள்ளதால் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால் நீர் திறப்பு திட்டமிட்டபடி நடக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
