சினிமா செய்திகள்
’அண்ணாத்த’ பட ரிலீசின்போது இதை செய்திருக்கலாமே? திமுக அரசுக்கு கஸ்தூரி கேள்வி!

திரையரங்குகளுக்கு செல்வதற்கு தடுப்பூசி அவசியம் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த நிபந்தனையை ’அண்ணாத்த’ பட ரிலீஸின்போது செய்து இருக்கலாமே என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திரையரங்குகள், மார்க்கெட்டுகள், பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்து பொது இடங்களில் தடுப்பு ஊசி செலுத்தி இருப்பது அவசியம் என்ற புதிய விதிமுறையை தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் முதல்வருக்கு கடிதம் எழுதி இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகை கஸ்தூரி தனது பேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: திரையரங்கில் ரசிகர்களை அனுமதிக்க தடுப்பூசி அவசியம் என்று திமுக அரசு அறிவித்துள்ளது நல்ல முயற்சி. ஆனால் சிம்பு நடித்த மாநாடு ரிலீஸின்போது இதை அறிவிக்காமல் ரஜினி நடித்த ’அண்ணாத்த’ படத்தின் ரிலீஸின்போது அறிவித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்/ அந்த பொன்னான வாய்ப்பை அரசு தவறி விட்டது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார் .
மேலும் ’அண்ணாத்த’ படத்திற்காக மாநாடு படத்தின் ரிலீஸை தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் வெளியாக இருக்கும் நிலையில் ’அண்ணாத்த’ ரிலீசுக்கு முன்பே திரையரங்குகளில் 50 சதவீத இருக்கை கட்டுப்பாடு நீக்கப்பட்டது நினைவில் கொள்ளவேண்டும் என்றும் கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிகள், பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்து ஆகியவைகளில் தடுப்பூசி கட்டாயம் என்பதை நடைமுறைப்படுத்த முடியாது என்பதை புரிந்து கொள்கிறேன். ஆனால் ரேஷன் அல்லது மதுபானங்கள் விற்பனை இடங்களில் இது மிகவும் சாத்தியம் என்பதை அரசு புரிந்து கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் திரையரங்குகள், இசை நிகழ்ச்சிகள், வழிபாட்டுத்தலங்கள், விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகியவற்றின் நுழைய தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் தேவை என நிபந்தனை விதித்துள்ளது. எனவே தடுப்பூசி அவசியம் என்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும் அனைவருக்கும் சட்டம் ஒன்றா? என்ற கேள்விதான் இங்கு எழுந்துள்ளது என்றும் நடிகை கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார்.



















