தமிழ்நாடு
“விஸ்வரூபம் படத்துல இடைஞ்சல் கொடுக்காம இருந்திருந்தா, என் சொத்து…”- கமல் ஓப்பன் டாக்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, ‘விஸ்வரூபம் படத்திற்கு மட்டும் இடைஞ்சல் கொடுக்காமல் இருந்திருந்தால் என் சொத்து மதிப்பு பல கோடி ரூபாய் உயர்ந்திருக்கும்’ என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்திக்கிறார்.

இந்த வாரத் தொடக்கத்தில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் கமல். இதைத் தொடர்ந்து அவர் அந்த தொகுதியில் ஒருங்கிணைக்கப்பட்ட பொதுக் கூட்டங்களில் தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் ஓர் பிரச்சாரக் கூட்டத்தில், ‘விஸ்வரூபம் படத்துக்கு இப்போது ஆட்சியில் இருக்கும் அரசு எனக்கு மிகப் பெரும் இடைஞ்சலைக் கொடுத்தது. அப்படி என்னைத் தொந்தரவு செய்யாமல், தடங்கல் செய்யாமல் இருந்திருந்தால் இந்நேரம் என் சொத்து 200 கோடி ரூபாயைத் தாண்டியிருக்கும். அப்படி என்னைச் செய்த காரணத்தினால் நான் அரசியலுக்கு வரவில்லை. என்னைப் போன்று பலர் இந்த அரசால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் நியாயம் கேட்டுத் தான் இங்கு வந்திருக்கிறேன்’ என்றார்.
















