வணிகம்
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இந்திய ரூபாயில் கடன் வழங்க வழிவகை: மத்திய வங்கியின் புதிய யோசனை!

இந்திய ரூபாயின் சர்வதேச பரவலுக்கு முக்கிய முன்னேற்றமாக, ரிசர்வ் வங்கி (RBI) புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதில், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் போன்ற அண்டை நாடுகளில் உள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, இந்திய ரூபாயில் நேரடியாக கடன் வழங்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், இந்திய வங்கிகளின் வெளிநாட்டு கிளைகள் மற்றும் உள்ளூர் வங்கிகள் இந்த நாணயத்தில் கடன் வழங்கும் அதிகாரம் பெறும். இதன் மூலம், இந்திய ரூபாயின் பன்முகப்படுத்தல் மற்றும் சர்வதேச ஏற்றுக்கொள்ளல் அதிகரிக்கும் என மத்திய வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தற்போது, இந்திய வங்கிகள் வெளிநாட்டு நாணயங்களில் மட்டுமே கடன்களை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய யோசனைக்கு மத்திய நிதி அமைச்சின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வர்த்தக விவரங்கள்:
இந்திய வர்த்தக அமைச்சக தரவுகளின்படி, 2024-25 ஆம் ஆண்டில் தெற்காசிய நாடுகளுக்கு இந்தியா மேற்கொண்ட ஏற்றுமதிகளில் 90% பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் மற்றும் இலங்கைக்கு இருந்தன. இதன் மொத்த மதிப்பு சுமார் 25 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
