ஆரோக்கியம்
வன்முறையாளராக மாறி வரும் குழந்தைகள் – ஆதரவற்ற பெற்றோர்

இலண்டன் பிபிசியின் ஒரு அறிக்கையின்படி பெரும்பாலான நடுத்தரக் குடும்பங்கள் இன்று சுய பாதுகாப்பு குறித்த வகுப்புகளை தேடிச் சென்று சேர்வது தொடர்கதையாகிறது. தங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் வெளிநாட்டவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள அல்ல… தங்களுடைய குழந்தைகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே!!!… ஐரோப்பா அமெரிக்கா போன்ற பல நாடுகளில் குழந்தைகள் தங்களுடைய பெற்றோருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இத்தகைய சம்பவங்களில் காவல்துறையும் உடனடியாக தலையிட முடியாத சூழல்கள் காணப்படுகின்றன.
இந்தியாவும் இதற்கு விதி விலக்கல்ல. ஆனால் இங்கே இப்படியான சம்பவங்களை குடும்பத்திற்குள்ளேயே மறைத்து வைக்க பெரும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
இப்போதெல்லாம் தங்கள்து சொந்த குழந்தைகளால் அவதிப்படும் பெற்றோர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பல மடங்கு அதிகரித்து வருவது வேதனையான விஷயமாக மாறி வருகிறது. இதற்காக பெற்றோருக்கான புகலிடங்களாக பல்வேறு அமைப்புகள் உருவாகிவரும் சூழலும் காணப்படுகிறது.
குழந்தைகளால் பெற்றோர்கள் கொல்லப்பட்ட அரிதான நிகழ்வுகளும் நடந்துள்ளன. பெற்றோர்கள் கொடூர குழந்தைகளிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்வது இப்போதெல்லாம் இயலாத காரியமாக மாறி வருகின்றது.
இளம் தலைமுறையினருக்கு “சுதந்திரம்“ அதிகம் கிடைத்தால் தாய் தந்தையரின் அடக்குமுறையிலிருந்து காக்கும் பெயரில் பல இளைஞர்கள் தந்தையைத் தாக்குவது உலகம் முழுதும் பொதுவான சம்பவமாகிவிட்டது.
குழந்தைகளின் கையில் உள்ள மொபைல் போன் அவர்களுக்கு எல்லாவற்றையும் மிக எளிதாக காட்டுகிறது. வீடியோ கேம்கள் முழுவதுமாக போராட்டம், தாக்குதல், உயிர்க்கொல்லல் போன்ற காட்சிகளைக் கொண்டவை – அவை வெற்றி கொள்வது என்பது எதிரியை அழித்தால்தான் கிடைக்கும் என்ற எண்ணத்தை விதைக்கின்றன.
நாம் சொல்லிக் கொடுக்கும் குழந்தைப் பருவக் கதைகளில் கூட ராமாயணம், மகாபாரதம் போன்றவை வன்முறையை அழகுபடுத்தி மிகைப்படுத்தியே காட்டுகின்றன.
நம் நாட்டின் பெரும்பாலான வீரர்கள், தெய்வங்கள் என்று சொல்லப்படும் படங்களில் எல்லோரின் கையிலும் வாள் வேல் வில் ஆயுதம் இருக்கும்.
காந்தி அம்பேத்கார் போன்றவர்கள் ஆயுதமற்றவர்களாக விதி விலக்காகவே தெரிகிறார்கள்.
நகரங்களின் எந்த மூலையில் பார்த்தாலும் 4 முதல் 5 இளைஞர்கள் ஒன்றாகக் கூடி தாக்குதல் மிரட்டல் வன்முறை பற்றி பேசுவதை சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது. இதுவே பழக்கமாகி விட்டால் தவறல்ல என்ற நோக்கில் மெல்ல மெல்ல இறுதியில் குடும்பத்திற்குள்ளும் நுழைந்து விடுகிறது.
இணையத்தின் உலகத்திற்கான கதவை குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்களே முதலில் திறந்து வைக்கிறார்கள். அதற்கான விளைவுகளை அவ்வப்போது அனுபவிக்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படுகிறார்கள். குழந்தைகள் தவறான பாதையில் சென்றால் அதற்குரிய விலையை பெற்றோர்கள்தான் செலுத்த வேண்டியிருக்கிறது.
நமது குழந்தைகளிடத்தில் நமது அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதை மறுபரிசீலனை செய்ய வெண்டிய நேரமிது. எச்சரிக்கையாக இருங்கள்… கவனமாக கையாளுங்கள்…












