இந்தியா
நேரத்தை விழுங்கும் மின்னஞ்சல்கள்

இப்போதெல்லாம் எல்லோரும் சொந்த பயன்பாட்டிற்காக ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்கள் கணக்கை துவங்கி வைத்துக் கொள்வது என்பது வாடிக்கையாகிவிட்டது. சின்சியர் சிகாமணியாக இன்பாக்சில் வரும் மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்புவதையும் சிலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இப்படித்தான் நானும் சில மின்னஞ்சல் கணக்குகளை வைத்தள்ளேன். அதுமட்டுமில்லாமல் அலுவலக பயன்பாட்டிற்கான சில மின்னஞ்சல்களை வேறு பயன்படுத்துகிறேன்.
எனது அனுபவத்தை பார்த்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்களேன்.
காலையில் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நேரத்தில் சென்றேன். எனது கணினியில் அவுட்லுக்கில் கோபைலட் இருப்பதால் மின்னஞ்சல்களுக்கு டக் டக் என பதில்களை அனுப்பினேன்.
இன்பாக்சில் மின்னஞ்சல்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். ஒன்றுக்கு பதில் அனுப்பினால் உடனே பதில் அனுப்புவார்கள். நானும் திருப்பி பதில் அனுப்ப இப்படி அவர்கள் தங்கள் காரியத்தை முடித்துக் கொண்டு “நன்றி“ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள்.“
என்னோட அவுட்லுக்கில் ஆன்லைன் என்று காட்டுகிறதோ என்னவோ யாருக்குத் தெரியும்? அலுவலகத் தொலைபேசி அடித்தது. எடுத்தால் ஒரு விற்பனையாளர் நான் அனுப்பும் மின்னஞ்சல்களுக்கு நீங்கள் பதிலே போடவில்லை. அதனால்தான் அழைத்தேன். ஒரு அரை மணி நேரம் பிரசண்டேஷன் செய்ய வேண்டும். நேரில் வரவா? ஜீமில் பண்ணவா? என்றார்.
பதில் போடவில்லை என்றாலே விருப்பம் இல்லை என்று தெரியாதா? போனை வை என்று திட்ட முடியவில்லை. பாவம் யார் பெத்த புள்ளையோ? எல்லாம் ஒரு சாண் வயிற்றுப் பிழைப்புக்குத்தான் என்பதால் “இல்லைப்பா நானெல்லாம் எதுவும் வாங்க மாட்டேன். நீ வேற ஆளைப் பார்.“ என்று சொல்லி விட்டு தொலைபேசியை வைத்தேன்.
இதற்குள் மதிய ம் 12 மணி ஆகி விட்டது. அதற்கு பிறகு மின்னஞ்சலைத் திறப்பதே இல்லை என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு மற்ற வேலைகளை முடித்து விட்டு வந்தேன். மின்னஞ்சல்களுக்கு எல்லாம் ஒரு மணி நேரத்துக்கு மேல் செலவு செய்யக் கூடாது. அதுவும் அலுவல் தொடர்பானதாக இருந்தாலும் மொக்கையான மின்னஞ்சல்களுக்கு எல்லாம் பதில் போட்டுக் கொண்டு இருக்கக் கூடாது என்று கற்றுக் கொண்டேன்.
என்ன உங்களுக்கும் இப்படியான அனுபவம் உண்டா? உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள்.












