தமிழ்நாடு
ஜெயலலிதா மரணம் தொடர்பான வீடியோ: திகில் கிளப்பும் மேத்யூ சாமுவேல்!

சமூக ஊடகம், காட்சி ஊடகம், அச்சு ஊடகம் என அனைத்து ஊடகங்களிலும் மேத்யூ சாமுவேல் என்ற பெயர் பிரபலமான ஒன்றாக மாறிவிட்டது. தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வைத்திருக்கும் குற்றச்சாட்டு தான் இந்த பிரபலத்துக்கு காரணம்.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஐந்து கொலைகளை செய்தவர் என மேத்யூ கூற தமிழக அரசியல் களம் அதிர்ந்துவிட்டது. தொடர்ந்து மேத்யூ வேகமாக செயல்பட அதிமுக தரப்பு மேத்யூக்கு சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் நேற்று என்னையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்திய மேத்யூ மேலும் பல அதிர்ச்சியளிக்கும் வீடியோக்கள் இருப்பதாக கூறி அடுத்த புயலுக்கு தயாராகி விட்டார்.
மேத்யூ தனது பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, அப்போலோவில் உள்ள சீனியர் டாக்டர்கள் சிலரின் பழக்கம் எனக்குண்டு. ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவர்கள் வீடியோவில் பேசி உள்ளனர். அவர்கள் கேட்டுகொண்டதன் பேரில் நான் அதை வெளியிடவில்லை. நான் சில ஆதாரங்களை வெளிப்படுத்த முடியாது. எங்களுக்குச் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. என்னிடம் சில முக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன என்றார். மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பேச நான் மருத்துவர் இல்லை. சம்பந்தப்பட்ட துறையினர்தான் விசாரிக்க வேண்டும் என்றார்.
இதுமட்டுமில்லாமல், கொடநாடு சம்பந்தமாக விசாரணை அதிகாரிகளின் வீடியோ என்னிடம் இருக்கிறது. என்னிடமுள்ள ஆதாரங்களை வெளியிட முடியாது. தன்னிச்சையாக முடிவு எடுக்க கூடிய விசாரணை அமைப்பு உருவாக்கினால் அதில் சொல்வேன் என தெரிவித்தார் மேத்யூ சாமுவேல்.




















