சினிமா செய்திகள்
தொடர் தோல்விக்கு பொறுப்பு ஏற்கும் அக்க்ஷய் குமார்!

சினிமா வியாபாரம், வசூல் என்பது கதாநாயனை முன்னிறுத்தி செய்யப்படுகிறது. இந்தி திரையுலகில் முதல் நிலை வியாபார மதிப்புள்ள நடிகர்களில் அக்க்ஷய் குமாரும் ஒருவர்.
கொரோனா பொது முடக்கத்திற்கு பின் பாவுட்டில் முன்னணி கதாநாயகர்கள் நடிப்பில் வெளியான படங்கள் தோல்வியை தழுவியுள்ளன.
2023, ஜனவரி 25 அன்று ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் குறுகிய நாட்களில் 1000-ம் கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது,
அதனை தொடர்ந்து அக்க்ஷய்குமார் நடிப்பில் இந்தியில் வெளியான “செல்ஃஃபி” மோசமான தோல்வியை தழுவியுள்ளது.

அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான ‘செல்ஃபி’
பொதுவாக படத்தின் வெற்றி தங்களால் ஆனது என்பார்கள் ஹீரோக்கள். அதேநேரம் தோல்வி என்றால் அதற்கு இயக்குநர் பக்கம் கை காட்டிவிடும் சினிமாவில் தோல்விக்கு நானே பொறுப்பு என கூறியுள்ளார் அக்க்ஷய்குமார்.
கடந்த 2021-ம் ஆண்டு ரோகித் ஷெட்டி இயக்கத்தில் அக்க்ஷய் குமார், கேத்ரீனா கைப் நடித்த ‘சூர்யவன்ஷி’ திரைப்படம் 2021ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்றது.
இந்தப் படத்தில் இந்தி திரையுலகில் முன்னணி நடிகர்களான ரன்வீர் சிங், அஜய் தேவ்கன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர்.
சூர்யவன்சி படத்தின் வெற்றிக்குப் பிறகு அக்க்ஷய் குமார் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வருகின்றன.
கடந்த ஆண்டு வெளியான ‘ரக்க்ஷா பந்தன்’, ‘சாம்ராட் பிரித்விராஜ்’ ராம் சேது ஆகிய படங்கள் பாக்ஸ்ஆபீஸ் வசூலில் வெற்றிபெறவில்லை.
இந்த நிலையில் அக்க்ஷய் குமார் நடிப்பில் பிப்ரவரி 24 அன்று ‘செல்பி” திரைப்படம் வெளியானது. இந்த படம் முதல் நாளில் ரூ.2.50 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தனது படங்களின் தொடர் தோல்வி குறித்து அக்க்ஷய் குமார் மனம் திறந்துள்ளார். இது தொடர்பாக பேட்டி ஒன்றில் அவர் பேசியதாவது;-
“இப்படி நடப்பது எனக்கு முதன்முறையல்ல. என்னுடைய திரைப்பயணத்தில் 16 தோல்விப்படங்களை கொடுத்திருக்கிறேன். ஒரு காலத்தில் 8 படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்துள்ளன.
படங்கள் வெற்றி பெறாததற்கு நான் தான் காரணம். பார்வையாளர்கள் மாறிவிட்டனர் அவர்கள் விரும்புகிற கதையை தேர்வு செய்ய நானும் மாற வேண்டிய தேவை எழுந்துள்ளது. நாம் நம்மை மாற்றியாகவேண்டும். மீண்டும் தொடக்கத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். பார்வையாளர்கள் வழக்கமானதைத் தாண்டி வேறொன்றை எதிர்பார்க்கிறார்கள்.
தொடர்ந்து படங்கள் தோல்வியடைகிறது என்றால் நாம் மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதற்கான அலராம் தான் அது. நான் மாற முயல்கிறேன். இப்போதைக்கு என்னால் செய்ய முடிந்தது அதுதான்.
படம் ஓடவில்லை என்றால் அதற்கு காரணம் ரசிகர்கள் அல்ல. காரணம் எனது விருப்பத்தேர்வு தான். ஒருவேளை எனது படங்களில் சரியான அம்சங்கள் இல்லாமல் இருந்திருக்கலாம்.” என கூறியுள்ளார்.