இந்தியா
மேற்குவங்கத்தில் 4ஆம் கட்ட தேர்தலில் பயங்கர வன்முறை: 4 பேர் சுட்டுக்கொலை!

மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்கனவே மூன்று கட்ட சட்டமன்ற பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் திடீரென ஒரு வாக்குச்சாவடியில் பெரும் வன்முறை ஏற்பட்டு துப்பாக்கிச்சூடு ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் வாக்குச்சாவடியின் வெளியே இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாகவும், கொல்லப்பட்டவர் முதல் முறை வாக்காளர் என்றும் கூறப்படுகிறது.
வாக்குச்சாவடியில் முன்பாகவே இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளதாகவும், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இளைஞர் மட்டுமின்றி மொத்தம் நான்கு பேர் இறந்திருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும் தற்போது அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.





















