இந்தியா
வேலை இல்லாத இந்தியர்கள் எங்கள் நாட்டிற்கு வாருங்கள்.. இந்தியா வந்த ஜெர்மனி அதிபர் அழைப்பு..!

உலகம் முழுவதிலும் உள்ள முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் ஜெர்மனி திண்டாடிக் கொண்டிருப்பதாகவும் இந்தியா உள்பட உலகில் உள்ள வேலையில்லாத நிபுணர்கள் ஜெர்மனிக்கு வரலாம் என்றும் இந்தியா வந்துள்ள ஜெர்மன் அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
இரண்டு நாள் அரசு முறை சுற்றுப்பயணம் ஆக இந்தியா வந்த ஜெர்மனி அதிபர் நேற்று பெங்களூரில் நடந்த முக்கிய மாநாடு ஒன்றில் கலந்து கொண்டார். பிரபல நுட்ப வல்லுநர்கள், தொழில் அதிபர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இதில் பேசிய ஜெர்மனி அதிபர் ’ஜெர்மனியில் திறமையாக பணிபுரியும் தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள் என்றும் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு இந்தியர்கள் உள்பட உலகம் முழுவதிலும் உள்ள திறமையானவர்கள் ஜெர்மனிக்கு வரலாம் என்றும் அவர்களுக்கு கண்டிப்பாக வேலை உண்டு என்ற உறுதியை நான் அளிக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு அனைத்து துறைகளிலும் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என்றும் குறிப்பாக மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் நிபுணர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள் என்றும் ஜெர்மனி அதிபர் தெரிவித்தார். மேலும் ஜெர்மனிக்கு வேலை வாய்ப்புக்காக பயணம் செய்பவர்களூக்கு வசதியாக விசா நடவடிக்கைகள் எளிமைப்படுத்தப்படும் என்றும் ஆசிய நாடு மற்றும் மற்ற கண்டங்களில் உள்ள நாட்டைச் சேர்ந்தவர்கள் இதை பயன்படுத்திக் கொண்டு ஜெர்மனிக்கு வேலை வாய்ப்புக்காக வரலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
திறமையான தொழிலாளர்களுக்கு விசா நடவடிக்கையில் உள்ள தடைகளை குறைக்க உறுதி செய்வதாகவும் குடும்பத்துடன் வருவதற்கு கூட அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். திறமையான இந்தியர்களை ஜெர்மனி எப்போதும் வரவேற்கிறது என்றும் சமீபத்தில் வேலை இழந்த மற்றும் வேலை தேடும் நபர்கள் ஜெர்மனிக்கு விசாவுக்காக விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.