இந்தியா
மனைவியின் கள்ளக்காதலனின் மனைவியை திருமணம் செய்து பழி தீர்த்த நபர்!

பீகார் மாநிலத்தில் ஒரு நபர் தனது மனைவியுடன் கள்ளக்காதல் உறவு வைத்துள்ளவரின் மனைவியை திருமணம் செய்து பழிதீர்த்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

#image_title
பீகாரின் ககாரியா மாவட்டத்தை சேர்ந்த நீரஜ் தனது மனைவி ரூபி மற்றும் 4 குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். ஆனால் இவரது மனைவி ரூபிக்கு முகேஷ் என்ற நபருடன் கள்ளக்காதல் உறவு இருந்து வந்துள்ளது. முகேஷுக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. நீண்ட நாட்களாக இருந்து வந்த இவர்களது கள்ள உறவு நீரஜுக்கு தெரியவர ரூபியும் முகேஷும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு தனியாக வாழ்ந்து வந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த நீரஜ் காவல் நிலையம், கிராம பஞ்சாயத்து என பல இடங்களை நாடிய பின்னர் முகேஷை பழிதீர்க்க ஒரு வித்தியாசமான முடிவை எடுத்தார். மனைவியால் கைவிடப்பட்ட நீரஜ், முகேஷின் மனைவியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் முகேஷின் மனைவி பெயரும் ரூபி என்பதாகும்.
இந்நிலையில் முகேஷின் மனைவி ரூபியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட நீரஜ் சில தினங்களுக்கு முன்னர் அவரை உள்ளூர் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இதில் நீரஜின் மூன்று குழந்தைகள் முகேஷ்-ரூபி ஜோடியிடமும், முகேஷின் 2 குழந்தைகள் மற்றும் நீரஜின் 1 குழந்தை என 3 குழந்தைகள் நீரஜ்-ரூபி ஜோடியிடமும் வளர்ந்து வருகின்றன. இந்த பழிக்கு பழி சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.