சினிமா
விஜய்யை அடுத்து ரஜினி, யஷ்ஷை குறிவைக்கும் பிரபல தயாரிப்பாளர்!

விஜய்யை அடுத்து நடிகர் ரஜினி, யஷ்ஷூடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார் பிரபல தயாரிப்பாளர்.
தெலுங்கில் முன்னணி இயக்குநரான வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் உள்ளிட்டப் பலர் நடித்திருந்த படம் ‘வாரிசு’. இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு இந்தப் படம் வெளியானது. வசூல் ரீதியாக இந்தப் படம் தயாரிப்பாளரைக் காப்பாற்றினாலும், விமர்சன ரீதியாக மோசமான தோல்வியைத் தழுவியது. படத்தின் கதைக்காகவும், அதன் காட்சியமைப்புக்காகவும் ரசிகர்கள் இணையத்தில் கேலி செய்தனர்.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியான இந்தப் படத்தில் அதிகமாக தெலுங்கு வாடை அடிப்பதாகவும், பல காட்சிகளில் சிஜி காட்சிகள் மோசமாக இருப்பதாகவும் பல விமர்சனங்களைப் பார்க்க முடிந்தது. ஆனாலும், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த நிலையில், தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தயாரிப்பாளர் தில் ராஜூ #AskDilraju என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களுடன் சமீபத்தில் கலந்துரையாடினார்.
இதில் ரசிகர் ஒருவர் ‘’வாரிசு’ பட ரிசல்ட்டுக்கு விஜய் தந்த ரியாக்ஷன் என்ன?’ எனக் கேட்டிருக்கிறார். அதற்கு தயாரிப்பாளர் தில் ராஜூ, ‘இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பும் வசூலும் பார்த்து நடிகர் விஜய் மகிழ்ச்சியாக உள்ளார். பொங்கல் வின்னர் ‘வாரிசு’ என்றும் கூறினார்’ எனத் தெரிவித்ததோடு, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் யஷ்ஷூடன் இணைந்து படம் செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
‘வாரிசு’ படத்தின் மூலம் விஜய்க்கு மோசமான படம் தந்தது போதாது என அடுத்து ரஜினி, யஷ்ஷையும் விட்டு வைக்கவில்லையா என கமெண்டில் ட்கேலி செய்து வருகின்றனர்.