இந்தியா
தேர்தல் கால பறக்கும் படையிடம் சிக்கும் அப்பாவி பொதுஜனம்… அந்தோ…பரிதாபங்கள்…!!!

தமிழகம் முழுதும் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்துள்ளார்களாம்! தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக். தெரிவித்துள்ளார்…!
அரசியல்வாதிக்கு அஞ்சா பறக்கும் படை வீரர்கள்..!
என்று பாராட்டத்தான் தோன்றுகிறது.
ஆனால், யதார்த்தத்தில் தேர்தல் பறக்கும் படையினர் இப்படி பறிமுதல் செய்வது, பெரும்பாலும் அப்பாவி மக்களிடம் இருந்து தான் என்ற உண்மை சுடுகிறது.
தமிழகம் முழுக்க தற்போது 234 தொகுதிகளிலும், தொகுதிக்கு தலா 9 பறக்கும் படைகளாம்!
9 நிலை கண்காணிப்புக் குழுக்கள் என்ற விகிதத்தில், 2,160 பறக்கும் படைகள், 2,160 நிலைக் கண்காணிப்புக் குழுக்களாம்!
அரசியல்வாதிகள் இதற்கெல்லாம் கொஞ்சமும் அலட்டிக் கொள்வதில்லை. அவர்களின் கொண்டாட்டத்தில் எதுவும் குறையப் போவதுமில்லை. ஆனால், சாதாரண மக்கள், வியாபாரிகள், சம்சாரிகள் பாடு தான் இன்னும் கொஞ்ச நாளைக்கு திண்டாட்டமோ, திண்டாட்டம்!
ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு பத்திரிகையாளன் என்ற வகையில் நான் பார்த்த, என் கவனத்திற்கு வந்த பல விவகாரங்கள் என்னுள் என்னென்ன பதற்றங்களை, ஆற்றாமைகளை, கொந்தளிப்புகளை எல்லாம் ஏற்படுத்தின.. என்று நினைத்துப் பார்க்கிறேன்…!
மகளின் கல்யாணத்திற்காக 25 ஆண்டுகளாக சிறுகச் சிறுக சேகரித்து நகை வாங்கித் திரும்பிய அந்த எளிய தந்தை பறக்கும் படையினரிடம் நகையை பறி கொடுத்து, அலையாய் அலைந்து, கண்ணீர் உகுத்தும் கடைசி வரை திரும்பப் பெற முடியவில்லை…
அவர் நகை வாங்கிச் சென்றது நேரடியாக நகை செய்யும் ஆச்சாரியிடம்! பெரிய நகைக் கடையிடமிருந்து வாங்கி இருந்தால் ரசீது கட்ட முடியும்! கிராமத்து மக்கள் சிறிய நகைப் பட்டறை வைத்திருக்கும் ஆச்சாரிகளிடம் பாரம்பரியமாக நகை வாங்கிச் செல்வார்கள்- மிக நியாயமான விலைக்கு…! எந்த ரசீதும் தரமாட்டார்கள்!
சந்தைக்கு சென்று ஆடு, மாடு விற்று திரும்பிய நிலையில் பறக்கும் படையினரிடம் பிடிபட்ட படிப்பறிவில்லாத ஏழை கிராமத்து பாமரப் பெண்கள் இருவர் எவ்வளவு அழுது புரண்டும் பணத்தை திரும்பப் பெற முடியாமல், மண்ணை வாரி இறைத்து சாபமிட்டு சென்ற காட்சியை மறக்க முடியுமா?
நேற்று திருவள்ளுர் மாவட்டத்தில் திருமணத்திற்காக பழைய நகைகளை ரிப்பேர் செய்ய 25 சவரன் நகைகளையும் புதிய நகை வாங்க இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கமும் எடுத்துச் சென்றவர்கள் இவர்களிடம் சிக்கிக்கொண்டு கல்யாணப் பெண்ணும் மிடில் கிளாஸ் பெற்றோரும் எவ்வளவோ கண்ணீர் விட்டு கதறியும் இவர்களின் அதிகார மனங்கள் இளகவில்லை.
’’அண்ணே வயலில் விளைந்த காய்கறிகளை மொத்த மார்கெட்டில் விற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தேன். பணத்தை மடியில கட்டி வச்சுறுந்தேன். மொத்த பணத்தையும் பகல் கொள்ளைக்காரன் போல பறிச்சுட்டாங்க.., கேட்டா பறக்கும் படையிங்கிறாங்க.. என் வேர்வையெல்லாம் வீணாச்சு, பயிர்க்கடனை எப்படி கட்டுவேன்னு தெரியலைண்ணே..’’ என்று அழுத விவசாயியின் குரல் நினைவில் வருகிறது.
மகனின் படிப்புக்காக பரிட்சைக்கு பணம் கட்டினால் தான் நாளை பரிட்சை எழுத அனுமதிப்பார்கள் என்ற நிலையில் கந்து வட்டிக்காரரிடம் கடன் வாங்கித் திரும்பிய நிலையில், பறக்கும் படையிடம் பிடிபட்டு கந்தலாகிப் போன அந்த ஏழைத்தாயின் கதறலைச் சொல்வதா..?
மேற்படி நான் சொன்னவை எல்லாம், பல்லாயிரக்கணக்கான எளிய மனிதர்கள் சிறு, குறு வியாபாரிகள், சிறு தொழில் செய்வோர், குடும்பஸ்தர்கள் தற்போது அனுபவித்து வருகின்ற துன்பத் துயரங்களின் ஒரு சில துளிகளே..!
அதிகாரிகளின் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கும் இந்த குறுகிய காலகட்டத்தில் இப்படி எத்தனையெத்தனையோ குரூரங்களை நடத்தி விடுகிறார்கள்!
பிடிபட்ட பணத்தின் மதிப்பையும், பிடிபட்ட நகைகளின் மதிப்பையும் ஊடகங்களிடம் வெளிப்படுத்தி பீற்றிக் கொள்வதில் இவர்களுக்கு தான் எவ்வளவு பெருமிதம்!
இதே காலகட்டத்தில் தான் பிரபல கட்சிகளின் அரசியல்வாதிகள் எந்தப் பிரச்சினையுமில்லாமல் திட்டமிட்டு தர வேண்டிய பணத்தையும், பொருட்களையும் கச்சிதமாக கைசேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களிடம் மட்டும் இந்த பறக்கும் படை பம்மிக் கொள்ளுமா? இல்லை, பாராமல் செல்லுமா? தெரியவில்லை. பல நேரங்களில் மக்களே குற்றங்களை பறக்கும் படையினர் கவனத்திற்கு கொண்டு சென்றாலும் கூட, எதுவும் நடக்காத சூழல்களையும் பார்க்கிறோம்…!
’ஜனநாயகம் மலர வேண்டும்’ என்பதற்காகத் தான் தேர்தல் நடத்துகிறார்கள்! ஆனால், தேர்தல் காலகட்டம் என்பது ’அதிகாரிகளின் சர்வாதிகாரம்’ கொடி கட்டிப் பறக்கும் காலகட்டமாகும்!
பெரிய, பெரிய அரசியல்வாதிகள் எல்லாம் பணிவோடு எளிய மக்களிடம் கும்பிடு போட்டு மக்களை ஆணையிடச் சொல்லி, மன்றாடுகின்ற இந்த காலகட்டத்தில் தான், எளிய மக்கள் அதிகாரிகளிடம் சின்னாபின்னப்பட்டு சீரழிகிறார்கள்!
மக்களே கவனம் கொள்ளுங்கள். உழைத்து சேகரித்த பணத்தையோ, நகைகளையோ, பொருட்களையோ கொண்டு செல்லும் போது பறக்கும் படைக்கு பலியாகிவிடாதீர்கள்!
ஐயா, அதிகாரி துரைமார்களே!
மனசாட்சிப்படி நேர்மையாகச் செயல்படுங்கள்!
பாமர மக்களிடம் கொஞ்சம் பரிவு காட்டுங்கள்!
எளியோரிடம் கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்!
சிறு,குறு வியாபாரிகளின் சிரமங்களை கருத்தில் கொள்ளுங்கள்!
நியாயம் என மனதிற்குப் பட்டால், விட்டு விடுங்கள் புண்ணியமாகும்!










