இந்தியா
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கும் மாநிலங்கள்: தமிழகத்தில் என்ன நிலை?

ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் பரவி வருவதை அடுத்து நேற்று டெல்லி மாநில அரசு பிறப்பித்த உத்தரவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து மேலும் சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் ஒமிக்ரான் வைரஸ் பரவி விட்டது என்பதும் குறிப்பாக டெல்லியில் 57 பேருக்கும் மகாராஷ்டிராவில் 54 பேருக்கு ஒமிக்ரான் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டெல்லி மாநில அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் டெல்லியில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட தடை என அறிவிக்கப்பட்டது.
டெல்லியை அடுத்து தற்போது மேலும் சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கிறிஸ்மஸ் புத்தாண்டு உள்பட பல்வேறு மத சம்பந்தமான விழா கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் இரவு பதினோரு மணிக்கு பின் ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் இந்த கட்டுப்பாடு ஜனவரி 15 வரை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மும்பையில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மும்பையில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் குஜராத் மாநிலத்தில் இரவு நேர லாக்டவுன் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அம்மாநிலத்திலும் கிறிஸ்மஸ் புத்தாண்டு கொண்டாட முடியாது என்பது குறிபிடத்தக்கது.
கர்நாடக மாநிலத்தில் எம்ஜி ரோடு உள்பட ஒரு சில முக்கிய சாலைகளில் மட்டும் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் கிறிஸ்மஸ் கொண்டாடுவதற்கான தடை குறித்து அறிவிப்பு வெளிவரவில்லை. இந்த நிலையில் பல மாநிலங்களில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் நிலை என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.



















